நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் : 2ம் தேதி முதல் இயக்கப்படுகிறது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்கவேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களும் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆயர்கள், தென் மாவட்டரயில் பயணிகள் சங்கத்திடம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கோரிக்கை வைக்க வலியுறுத்தினர். இந்நிலையில் தென்மாவட்ட ரயில்பயணிகள் சங்க தலைவர் டாக்டர் தேவ்ஆனந்த், பொதுச்செயலாளர் சூசைராஜ் ஆகியோர் தென்னக ரயில்வே முதன்மை இயக்கக மேலாளரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் குமரி மாவட்டத்தில் இருந்து அதிக பயணிகள், கிறிஸ்தவ மக்கள் வேளாங்கண்ணிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக நெல்லை, மதுரை, தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  அவர்கள் கோரிக்கை வைத்த நாள் அன்று கொல்லம் எம்எல்ஏ ராமசந்திரனும் ஒரு கோரிக்கை வைத்தார். அவரும் கொல்லத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனை கேட்ட ரயில்வே அதிகாரி வருகிற 2ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து பாண்டிச்சேரி ரயில் செல்லும் வழிதடத்தில் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்கப்படும்.

மறுநாள் ஞாயிற்றுகிழமை வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் செங்கோட்டை வழியாக புனலூர் இயக்கப்படும் என தெரிவித்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த தென்மாவட்ட ரயில்பயணிகள் சங்க நிர்வாகிகள் நாகர்கோவில் வேளாங்கண்ணிக்கு தனி ரயிலும், கொல்லத்திற்கு தனிரயிலும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து தென்மாவட்ட ரயில்பயணிகள் சங்க பொதுச்செயலாளர் சூசைராஜ் கூறியதாவது: வேளாங்கண்ணிக்கு அதிக அளவு மக்கள் சென்று வருகின்றனர். மேலும் தஞ்சை, நாகூர் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் மதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

இதுபோல் கொல்லம் எம்எல்ஏவும் வேளாங்கண்ணிக்கு ரயில் வேண்டும் எனகோரிக்கை வைத்தார். கோரிக்கையின் பேரில் சனிக்கிழமைதோறும் மதியம் 2 மணிக்கு வேளாங்கண்ணிக்கு நாகர்கோவிலில் இருந்து ரயில் இயக்க அனுமதிக்கப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் செங்கோட்டை வழியாக புனலூருக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி இயக்கும்போது குமரி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ரயில் பாண்டிச்சேரி ரயில் செல்லும் வழித்தடத்தில் இயக்க முடிவு செய்திருப்பதால் பயண நேரம் 16 மணி நேரம் ஆகும். மதுரை, தஞ்சை வழியாக இயக்கினால் 12 மணி நேரத்தில் வேளாங்கண்ணிக்கு சென்று சேரலாம்.

இந்த வழியில் பல புனிதஸ்தலங்கள் உள்ளன. அங்கு செல்ல வசதியாக இருக்கும். இதனால் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கும், கொல்லத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் தனிதனியாக ரயில் இயக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருகிற 2ம் தேதி ரயில் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் தேதி மாற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் கொச்சுவேளிக்கு இயக்க முடிவு செய்து இருப்பதாக அறிந்தோம். இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நாகர்கோவில் திருவனந்தபுரம் மார்க்கத்தில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை காலையில் திருநெல்வேலிக்கோ, அல்லது தூத்துக்குடிக்கோ இயக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: