சென்னை: சிலம்பரசன் பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான படமான ‘சிலம்பாட்டம்’, நாளை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இதற்கான விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது: நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன்.
ஆனால் என்னையே வியக்க வைத்த படம், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறு படங்களுக்கு கூட்டம் வரவில்லை. ரீரிலீஸ் படங்களுக்கு இப்போது மவுசு அதிகம். அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.
இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன், அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன்.
