ஏ.ஆர.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.அமீன், ஜெஸ்லீன் ராயல் ஆகியோர் குரலில் வெளியாகியுள்ள ‘பீகி பீகி’ என்ற ஆல்பம் பாடலில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ளனர். ‘சீதா ராமம்’ படத்திற்கு பிறகு இந்த ஜோடி சேர்ந்து நடித்திருப்பதால் இப்பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்பாடல் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிருணாள் தாக்கூரிடம் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்று. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும்.
எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன். சில நேரங்களில் காதலை ஏற்று கொள்வதோ, அங்கீகரிப்பதோ சிரமமாக இருக்கும். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறி கொண்டே இருக்கிறது. காலம் எவ்வளவு மாறினாலும், காதல் மாறாது. ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக சொல்வேன், காதலில் இருப்பவர்கள் யாரானாலும் அவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் பேதமில்லை, நீங்கள் காதல் வயப்பட்டால், அவர்களுக்காக எதையும் செய்யுங்கள். அவர்களிடம் சரணடையுங்கள்.
நான் ஒரு நடிகை என்பதை என் முதல் காதலனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் பாரம்பரிய குடும்ப பின்னணியில் இருந்து அவர் வந்ததால், என் வாழ்க்கை முறையும், தொழிலும் அவருக்கு சவுகரியமாக இல்லை. அந்த தருணத்தில், இருவருக்கும் பிரிவது தான் சிறந்தது என்று நங்கள் உணர்ந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
