அனஸ்வரா ராஜனுக்கும் அபிஷன் ஜீவிந்துக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இருவரும் சந்தித்து பேசும்போது, தங்களது பழைய காதலின் அதாவது தங்கள் வாழ்க்கையின் முதல் காதலை பற்றி பிளாஷ்பேக்கில் மூழ்குகிறார்கள். அப்போது அனஸ்வா, நாம் ரெண்டு பேரும் ஏன் நம்மோட முதல் காதலர்களை தேடிப்போகக் கூடாது என்கிறார். அந்த தேடல் பயணத்தில் நடப்பது என்ன என்பதை படு சுவாரஸ்யமாக சொல்கிறது வித் லவ்.
பள்ளிப் பருவத்தில் வரும் முதல் காதல் வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை நினைவில் நிற்கும் பசுமையான நினைவுகளை கொண்டது. அதைத்தான் இந்த படமும் சொல்கிறது. 96ல் பார்த்த காதல் ஒரு மாதிரி என்றால், ஜென் ஜீயின் இந்த காதல் வேறு மாதிரியானது. அதை சுவைபட சொல்லியிருப்பதுதான் இயக்குனர் மதனின் வெற்றியாக இருக்கிறது. அதிலும் திரைக்கதையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இதில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். நடிப்பில் யார் சாயலும் இல்லாமல் தனித்து நிற்கிறார். அதிலும் எமோஷன் காட்சிகளில் நல்லவே ஸ்கோர் செய்கிறார். கேரளத்து வரவு அனஸ்வரா ராஜன், அழகான தேவதையாக வருகிறார். நடிப்பிலும் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். காவ்யா அனில் முதல் காதல் நினைவுகளை கிளறிவிடும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரும் மனதில் இடம்பிடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, காதலை அழகியலோடு தந்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுகம். படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார், ஹீரோ – ஹீரோயினின் காதல் கதைகளை திறம்பட தொகுத்துள்ளார். இந்த ஆண்டின் மற்றொரு ஹிட் படம்.
