தந்தையை வெறுக்கும் தபு

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘காதல் தேசம்’ உள்பட சில படங்களில் நடித்தவர் தபு. அதன்பிறகு இந்தியில் பிசியான நடிகையாக வலம் வந்த அவர் தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். 54 வயதாகும் தபு இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஆண்களை பற்றி அவர் பேசிய கருத்து சர்ச்சையானது. இந்நிலையில், தபு தனது தந்தை பெயரை தனது பெயருக்கு பின்னால் பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, ‘‘நான் எனது தந்தையை சந்தித்ததும் இல்லை.

அவர் பெயரை பயன்படுத்துவதும் கிடையாது. எனக்கு 3 வயதாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். அதன் பிறகு எனது தந்தையுடன் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை. அதன் பிறகு எனது பாட்டி வீட்டில் தான் நான் வளர்ந்தேன். என் அம்மா ஓர் ஆசிரியை. இதனால் குழந்தை பருவத்தில் அதிகமான நேரத்தை எனது பாட்டியுடன் கழித்தேன். எனது பாட்டி புத்தகம் படிப்பது, பிரார்த்தனை செய்வது என்று நேரத்தை செலவிட்டார். நானும் அது போன்ற ஒரு சூழலில் வளர்ந்தேன். இதன் காரணமாக என் தந்தையை நான் சந்திக்க விரும்பவில்லை.

எனது தந்தையின் பெயரை பயன்படுத்தவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று நினைத்தேன். என் தந்தையின் பெயர் ஹஸ்மி. எனது முழு பெயர் தபசும் பாத்திமா. எனது தந்தையை பற்றிய எந்த நினைவும் என்னிடம் இல்லை. நான் அவரை சந்திக்க விரும்பவில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories: