சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அனஸ்வரா

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் இயக்குனராக கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘வித் லவ்’. இதில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். வரும் 6ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்படி ஒரு பேட்டியில் அனஸ்வரா ராஜன் கூறியது சர்ச்சையாகிவிட்டது. அந்த பேட்டியில், ‘‘எப்படி அபிஷன் மற்றும் அனஸ்வரா இடையே நட்பு உருவானது’’ என்ற கேள்விக்கு பதிலளித்த அபிஷன் ஜீவிந்த், ‘‘இவர் பெரிய நடிகை, அவரிடம் நடிப்பு பற்றி நான் ஏதாவது பரிந்துரை செய்தால், நம்மை கோமாளி மாதிரி பார்ப்பாரா என தயங்கினேன்’’ என்று சொன்னார்.

பிறகு பேசிய அனஸ்வரா ராஜன், ‘‘நான் அபிஷன் ஜீவிந்த்தின் வைபுக்குள் வருவதற்காக கொஞ்சம் வாய் பேச முடியாதது போல் நடித்தேன். அப்படித்தான் அவர் லெவலுக்கு நான் வந்தேன்’’ என்று கூறினார். தன்னுடன் நடித்த சக நடிகரை அனஸ்வரா ராஜன் மாற்றுத்திறனாளி போல் சித்தரித்து பேசிவிட்டார் என்று இந்த விஷயம் சர்ச்சையானது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அனஸ்வரா ராஜன், ‘‘இலகுவான உரையாடலில் நகைச்சுவையாக சொல்லப்பட்டு அனைவரும் ரசித்து சிரித்த ஒற்றை வரியை பிரச்னைக்குரிய வாக்கியமாக பிம்பப்படுத்த முயலும் நபர்களுக்கு இதனை சொல்கிறேன்.

கருத்தை திரிப்பதோ, ஒன்றும் இல்லாத விஷயத்தை எதிர்மறையானதாக மாற்றுவதோ ஊடக அறம் அல்ல. உங்கள் மீது கவனம் குவிய வேண்டும் என நினைக்கிறீர்களா? சமீபத்தில், தேவையில்லாத விஷயங்களுக்கு எதிர்வினையாற்ற கூடாது என்ற விதியை நான் கடைப்பிடித்து வந்தேன். ஆனால், இம்முறை நான் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: