உதவி இயக்குனர்களுக்கு தலா 1 கிரவுண்ட் நிலம் வழங்கிய வெற்றிமாறன்

சென்னை: தனது உதவி இயக்குனர்களுக்கு தலா 1 கிரவுண்ட் நிலம் வழங்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படம் இன்று ரிலீசாகிறது. அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க உள்ளார். வடசென்னை 2 படத்தையும் விஜய் நடிக்கும் படத்தையும் அடுத்தடுத்து இயக்க இருக்கிறார்.

தங்களிடம் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு பட வேலைகள் இல்லாத சமயத்திலும் சம்பளம் கொடுத்து நன்றாக கவனித்து கொள்ளும் இயக்குனர்கள், திரையுலகில் குறைவு. கொரோனா சமயத்தில் படப்பிடிப்பு இல்லாத நிலையிலும் தனது உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் சம்பளத்தை கொடுத்து வந்தார் இயக்குனர் முருகதாஸ். அதுபோல் வெற்றிமாறன், இப்போது ஒரு காரியம் ெசய்திருக்கிறார். இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என வெற்றிமாறனிடம் 12 பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகில் தலா 1 கிரவுண்ட் நிலம் இலவசமாக வழங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த இடத்தில் நீங்கள் வீடு கட்டலாம் அல்லது விவசாயம் செய்யலாம் என அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories: