சென்னை: பெங்காலி பாடகியும், சோஷியல் மீடியா பிரபலமுமான டெபோலினா நந்தி, கடந்த 4ம் தேதி பேஸ்புக்கில் நேரலையில் பேசியபோது, திடீரென்று தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். உடனே அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்ததால், டெபோலினா நந்தி மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்தார். இதுகுறித்து அவரது நண்பர் சாயக் சக்ரவர்த்தி கூறுகையில், ‘தற்போது சிகிச்சை முடிந்து டெபோலினா நந்தி உடல்நலமுடன் இருக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டார்’ என்றார். தற்கொலை முயற்சிக்கு முன்பு டெபோலினா நந்தி செய்த நேரலை வீடியோவில், அதிகமான மன உளைச்சலுடன் காணப்பட்டார். குடும்ப பிரச்னைகள் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘குடும்ப பிரச்னைகளில் மீண்டு வர பலமுறை நான் முயற்சித்தேன். ஆனால், என்னால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். டெபோலினா நந்தி தற்கொலைக்கு முயன்றபோது, அவரது தாய் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். டெபோலினா நந்தியின் தற்கொலை முயற்சிக்கு பின்னால், அவரது கணவரின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகளே காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
