சென்னை: திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று சொல்லப்படும் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று அவரது 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், ‘சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்துவிட்டேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாரதிராஜாவிடம் ‘16 வயதினிலே’ படத்தில் சேர்ந்தேன். வாய்ப்பு தேடிய காலத்தில், ‘கோவை ராஜா’ என்று கெத்தாக சொல்வேன். பிறகு பாக்யராஜ் ஆனேன். துணை இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், ‘புதிய வார்ப்புகள்’ மூலம் ஹீரோ, ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் வில்லன் என்று, படிப்படியாக வளர்ந்தேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோரை இன்ஸ்பிரேஷனாக நினைத்து நான் முன்னேறினேன். விரைவில் ஒரு வெப்தொடரையும், ஒரு படத்தையும் இயக்குகிறேன்’ என்றார். கடந்த 2010ல் தனது மகன் சாந்தனு ஹீரோவாக நடித்த ‘சித்து பிளஸ் 2’ என்ற படத்தை இயக்கியிருந்த கே.பாக்யராஜ், 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
