வி ம ர் ச ன ம்

 

ராணிப்பேட்டை அருகிலுள்ள கிராமத்தில் தனது மனைவி ரக்‌ஷணா மற்றும் மகனுடன் வசிக்கிறார், சிறு விவசாயி விதார்த். தனியார் வங்கியில் வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை ஏலம் விடுகின்றனர். இதையறிந்து வங்கியில் முறையிடும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கிய விஷயம் தெரியவந்து அதிர்ச்சி அடைகிறார். இதில் நடந்த மோசடியை கண்டுபிடிக்க, வழக்கறிஞர் ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆலோசனைப்படி, பாதிக்கப்பட்ட சில விவசாயிகளின் துணையுடன் கோர்ட்டுக்கு செல்லும் விதார்த், பிறகு நிலத்தை மீட்டாரா என்பது மீதி கதை.
கேரக்டராகவே மாறி இயல்பாக நடித்துள்ளார் விதார்த். அவரது மனைவியாக ‘மார்கழி திங்கள்’ ரக்‌ஷணா, அளவாக நடித்து மனதில் ஆழமாக இடம் பிடிக்கிறார். மாறன் சிரிக்கவும், கண் கலங்கவும் வைக்கிறார்.

அருள்தாஸ், சரவண சுப்பையா, இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜ் மற்றும் வங்கி ஊழியர்கள் யதார்த்தமாக நடித்துள்ளனர். ராணிப்பேட்டை, வாலாஜா, வேலூர் என்று, அருள் கே.சோமசுந்தரத்தின் கேமரா காட்சிகளை இயல்பாக பதிவு செய்துள்ளது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் அழுத்தம் இருக்கிறது. சிறு விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலம், அவர்களுக்கே தெரியாமல் பறிக்கப்படும் மோசடியை தோலுரித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய இயக்குனர் வி.கஜேந்திரன், முற்பகுதியை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

Related Stories: