வங்கி வேலையை உதறித் தள்ளிய வர்மா!

சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிவிட்டு வந்துள்ளதாக சொல்கிறார் புதுமுக நடிகர் வர்மா. ‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது பி.டெக். கிடைச்சது வங்கி வேலை. கல்லூரி சமயத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவுக்குள் வரமுடியவில்லை. பிரபல வங்கியில் உயர் பொறுப்பில் சில வருடங்கள் வேலை செய்தேன்.என்னுடைய சூழ்நிலை சினிமாவுக்கு சாதகமாக மாறியதும் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். பிரபல தனியார் பள்ளியில் நடிப்பு பயின்றேன்.

அங்கு சினிமா தொடர்பு கிடைத்தது. ‘இரும்புத்திரை’, ‘உல்டா’, ‘தடம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘காளி’, ‘ கே.டி (எ) கருப்புதுரை’, ‘பஞ்சராக்ஷரம்’ என்று மடமடவென்னு நன்கு பேசப்பட்ட படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பெரிய அனுபவத்தைக் கொடுத்தது. படப்பிடிப்புக்காக நாற்பது நாள் ராஜஸ்தான் போனேன். அந்தப் படம் சினிமாவுக்கு வந்த எனக்கு முழு திருப்தியைக் கொடுத்தது.நண்பர்கள் சிலர் இயக்குநர் வினோத் சாரிடம் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற படங்களில் வாய்ப்பு கேட்டீர்களா என்று கேட்கிறார்கள்.

வினோத் சார் எனக்கான வாய்ப்பு இருந்தால் கொடுப்பார். அதுமட்டுமல்ல, ‘வலிமை’ படத்தில் முற்றிலும் புதியவர்கள் மட்டுமே நடிப்பதாக படக்குழுவிடமிருந்து தகவல் வந்தது. வினோத் சார் ராணுவ அதிகாரி மாதிரி கண்டிப்புடன் வேலை வாங்கக்கூடியவர். தற்போது அறிமுக இயக்குநர்  தீனதயாளன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகவுள்ளது.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாலும் நல்ல கேரக்டர் கிடைத்தால் கேரக்டர் ரோலிலும் நடிப்பேன். எனக்கு ஆக்‌ஷன் கதைகள் பிடிக்கும். ஆனால் வளரும்போதே அந்த மாதிரி ஆக்‌ஷன் வேடங்களில் நடித்தால் ஓவர் பில்டப்பாக இருக்கும். அதனால் கதைக்கான நாயகன் வேடத்திலும் எனக்கு பொருத்தமாக இருக்கும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன். எனக்கு சினிமா பின்புலம் இல்லை. நம்பிக்கையுடன் வாய்ப்பு தேடினேன். என்னுடைய கடின முயற்சிகளால் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடிந்தது’’ என்கிறார்.

Related Stories: