மாளவிகா கற்கும் ‘பார்கோர்’ கலை

ஹீரோக்கள் அறிமுகமாகும்போதே ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் நடிக்க வருகின்றனர். இதற்காக அவர்கள் சண்டை பயிற்சி, நீச்சல் பயிற்சி, குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என பல்வேறு ஸ்டண்ட் கலைகள் கற்க வேண்டி உள்ளது. இந்நிலையில் ஹீரோயின்களுக்கும் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆசை வந்திருக்கிறது. இதையடுத்து உடலை ஃபிட்டாக வைக்க தினமும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் கராத்தே, குங்பூ போன்ற கலைகளை கற்கின்றனர். இதையும் தாண்டி தற்போது வெவ்வேறு கலைகள் கற்பதில் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

‘அதோ அந்த பறவை போல’ படத்துக்கு கிராமகா எனப்படும் சண்டை பயிற்சி பெற்று அதை பயன்படுத்தி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் அமலாபால். அவரது துணிச்சலான ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த இயக்குனர் வினோத், அமலாபாலை ஹீரோயின் என்பதற்கு பதிலாக எனது ஹீரோ என்று அழைத்து வருகிறார். அதேபோல் பட்டாஸ் படத்தில் நடித்திருக்கும் சினேகா அடிமுறை எனப்படும் பழம்பெரும் தமிழர் சண்டை பயிற்சி கலையை கற்று அதை படத்தில் பயன்படுத்தினார்.

இந்த வரிசையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் இணைந்திருக்கிறார். விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் மோதும் காட்சிகள் இடம்பெறுகிறது. இதற்காக இவர் பார்கோர் எனப்படும் கலையை கற்று வருகிறார். அடுக்கு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு தாவுவது, உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்திற்கு அநாயசமாக குதிப்பது, இடைவெளி அதிகமாக உள்ள இடங்களை கூட ஒரே பாய்ச்சலில் தாண்டிக்குதிப்பது போன்ற காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இடம்பெறும்.

அந்த கலைதான் பார்கோர். இதையொரு விளையாட்டாக வெளிநாடுகளில் இளைஞர்கள் செய்து அதை யூ டியூபில் அப்லோட் செய்திருக்கின்றனர். பார்கோர் கலையை ஏற்கனவே மோகன்லாலுடன் நடித்த பிரணவ் படத்திற்காக மாளவிகா கற்றிருக்கிறார். தற்போது அதில் தேர்ச்சி பெறும்வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மாஸ்டர் படத்தில் மாளவிகாவின் ஆக்‌ஷனும் ஒரு அசத்தல் அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories: