நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்ததை கேட்டதால் மீடியாவை கடிந்து கொண்ட டாப்ஸி

மும்பை: இந்தி பட நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததை கேட்டதால் மீடியாவை நடிகை டாப்ஸி கடிந்துகொண்டார். தமிழில் பல படங்களில் நடித்த டாப்ஸி, இந்தியில் பிங்க் படத்தில் நடித்து பிரபலம் ஆனார். இப்போது ஷாருக்கான் ஜோடியாக டன்கி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இத்துடன் அனுராக் கஷ்யப் தயாரிக்கும் துபாரா படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் குறித்த நேரத்துக்கு டாப்ஸி வரவில்லை. தாமதமாக வந்தார். இதையடுத்து, ஏன் லேட் என பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்க பிரச்னை வெடித்தது. ‘எனக்கு சொன்ன டைமுக்கு நான் வந்திருக்கேன், என்னை எப்படி லேட்னு சொல்லலாம்’ என டாப்ஸி அந்த பத்திரிகையாளரிடம் எகிறி உள்ளார்.

 இதில் மீடியாவினருக்கும் டாப்ஸிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கைகளை நீட்டி மிரட்டுவது போல் நீங்கள் பேசியுள்ளீர்கள் என மீடியாவினர் சொன்னதும், கையெடுத்து கும்பிட்டு, ‘நான் கேமரா முன்னாடி நிற்கிறேன். நான் எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும். கொஞ்சம் நீங்களும் கேமரா முன்னாடி வந்து பேசினால், நீங்க எப்படி கேள்வி கேட்டீங்கன்னு புரியும். எப்போதுமே நடிகர்கள் தான் தவறு செய்வார்கள். இல்லையா?’ என கோபமாக கேட்டார் டாப்ஸி. இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அலியா பட்டின் டார்லிங்ஸ், ஆமிர்கானின் லால் சிங் சட்டா உள்ளிட்ட படங்களை தடை செய்வதாக ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், தங்களுடைய துபாரா படத்தையும் தடை செய்ய பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்கும் என சமீபத்தில் அனுராக் கஷ்யப் பேசிய நிலையில், மீடியாவுடன் டாப்ஸி மோதியது, புரமோஷன் யுக்தியாக இருக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories: