உருவகேலிக்கு ஆளாகி தவித்த அபர்ணா

பொதுவாக மற்ற துறைகளில் இருப்பவர்களை விட, விளையாட்டுத்துறை வீரர், வீராங்கனைகள் மற்றும் திரைத்துறையிலுள்ள ஹீரோ, ஹீரோயின்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உடல் தோற்றம் குறித்த கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இதுபோன்ற உருவகேலி விமர்சனங்களை ஹீரோயின்கள் அதிகமாக எதிர்கொள்கின்றனர். தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளி, இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களுக்கு தானும் ஆளானதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒருமுறை விமான நிலையத்தில் ​​திடீரென்று ஒருவர் என்னிடம் வந்து, ‘நீ ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?’ என்று என் முகத்தை பார்த்து கேட்டார்.

அவர் யார் என்று கூட எனக்கு தெரியவில்லை. அவர் எல்லோருக்கும் முன்னால் நின்று இப்படி என்னிடம் கேட்டபோது, ​​எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் மன வேதனை அடைந்தேன். என்னைப் பற்றி எப்படி இப்படி கேட்கலாம் என்று அவரிடம் சண்டை போட்டேன். இப்படி கேட்பது மிகப்பெரிய தவறு என்று சொன்னேன். உடனே அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். ஒரு காலத்தில் இதுபோன்ற வார்த்தைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது நான் மிகவும் வலிமையானவளாகி விட்டேன். எதிர்மறையான கருத்துகளை பற்றி துளியளவு கூட கவலைப்படுவது இல்லை’ என்றார்.

Related Stories: