கூர்கா - விமர்சனம்

வடநாட்டு கூர்கா தாத்தா, வடசென்னை பாட்டியின் ஒரே பேரன் யோகி பாபு. போலீஸ் ஆக வேண்டும் என்பது அவரது லட்சியம். உடல் தகுதி இல்லாததால், போலீஸ் தேர்வில் இருந்து நிராகரிக்கப்படுகிறார். அவரைப்போலவே நாய் ஒன்றும் நிராகரிக்கப்படுகிறது. இதையடுத்து இருவரும் கூட்டு சேர்கின்றனர். மனோபாலா கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேரும் யோகி பாபு, பாதுகாப்பு பணிக்காக சென்ற இடத்தில், அமெரிக்க தூதர் எலிசாவை கண்டவுடன் காதலிக்கிறார். இதையறிந்து பயந்த மனோபாலா, உடனே யோகி பாபுவை வணிக வளாகத்தின் செக்யூரிட்டியாக மாற்றுகிறார்.

 

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு யாரும் உதவி செய்வதில்லை, மரியாதை தருவதில்லை என்று சொல்லி, ராஜ்பரத் மேற்பார்வையில் ஒரு கும்பல் வணிக வளாகத்தை ஹைஜாக் செய்கிறது. பாகுபலி 3 படம் பார்க்க வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் எலிசா, அரசியல்வாதி மயில்சாமி, சாமியார் நமோ நாராயணன் உள்பட பலர் வணிக வளாகத்தில் பணயக்கைதிகளாக சிக்கித் தவிக்கின்றனர்.

போலீசார் வந்தும் அவர்களை மீட்க முடியாத நிலையில், நாய் மற்றும் யோகி பாபு, சார்லி இணைந்து அனைவரையும் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது மீதி கதை. கதையின் நாயகனாக வந்து, காமெடி பன்ச் வசனங்களால் கலகலக்க வைக்கிறார் யோகி பாபு. ஆனால், எலிசாவை அவர் காதலிக்கும் காட்சிகள் கொஞ்சம் ஓவர். எலிசாவுக்கு அதிக வேலை இல்லை.  செல்ஃபி எடுத்து சிக்கிக்கொள்ளும் சார்லி, மயில்சாமி கோஷ்டியின் காமெடியை ரசிக்கலாம்.

வில்லன் ராஜ்பரத் மற்றும் ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர். ரவிமரியா சத்தமாக பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். தன் பங்குக்கு நாய் காமெடி செய்துள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், ராஜ் ஆர்யன் பின்னணி இசையும் கதை நகர உதவுகின்றன. சில காமெடி காட்சிகள், ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்தவை. சமூக நடப்புகளையும், இணையதள நக்கல்களையும் அடிக்கடி காட்டி, கற்பனை வறட்சியை நிரூபித்துள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன்.

Related Stories: