சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார் நடித்து, சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கிய படம், ‘சிறை’. இதன் 75வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. ஜி.கே.எம்.தமிழ்குமரன், சத்யஜோதி ஜி.தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சுஜாதா விஜயகுமார், டி.சிவா, எஸ்.கதிரேசன், வெற்றிமாறன், தமிழ், எல்.கே.அக்ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பிரபு பேசியதாவது: பிரபுவின் மகன், சிவாஜி கணேசனின் பேரன் என்ற அடையாளத்துடன் வளர்ந்தேன்.
பள்ளி நாட்களில் அந்த அடையாளம் கூடுதல் சிறப்பு அளித்தது. பிறகு அமெரிக்கா சென்றபோது என்னை நான் புரிந்துகொண்டேன். இந்தியாவுக்கு திரும்பியதும், திரையுலகில் என் பாதையை நானே உருவாக்கினேன். எனது முதல் படம் ‘கும்கி’ மிகப்பெரிய வெற்றிபெற்றது. சிலர் பாராட்டினர், பலர் விமர்சித்தனர். எனது பாதையை தெரிந்துகொண்டு முன்னேறினேன். சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு சேர்ந்த ஒரு துறை. அதில் பல்வேறு சவால்கள் இருக்கும். அதை கற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.
