ஐதராபாத்: ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’, ‘ரங்கஸ்தலம்’ போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அனுசுயா பரத்வாஜ். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான போதிலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அனுசுயா பரத்வாஜ், தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தமிழ், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சில வலைதளத் தொடர்களிலும் நடித்ததின் மூலம் மேலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அனுசுயாவை ரசிகர் ஒருவர் ஆன்ட்டி என்று அழைத்தால் கோபமடைந்த அவர், அந்த ரசிகரை கடுமையாக திட்டி எச்சரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் வரும் ட்ரோல்கள் குறித்து அவர் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘சமூக வலைத்தளங்களில் யாராவது என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால், அவர்களை நான் உடனடியாக பிளாக் செய்து விடுவேன். இதுவரை சுமார் 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன். இது மட்டுமின்றி பலருக்கு கடுமையான பதிலடியும் கொடுத்து உள்ளேன். சமூக வலைதளங்களில் எதையும் தவறாகப் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யும் இவர்கள் மனநலத்திற்கு ஆபத்தானவர்கள். எனவே இவர்களை நான் எதையும் சொல்லாமல் நேரடியாக பிளாக் செய்துவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.