தெளிவு பெறுஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

? துவாதசி அன்று அகத்திக்கீரை உண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன்படி, துவாதசி அன்று அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் சிலரையும் பார்த்து இருக்கிறேன். அகத்திக்கீரைக்கும் துவாதசிக்கும் என்ன தொடர்பு?

- கணேஷ், கோவை.

ஆரோக்கியம்! ஆரோக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தகவல் இது. ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திரங்களுக்கு ஓய்வு கொடுத்து, மெயின்டனன்ஸ் - பராமரிப்பு என்ற பெயரில் அந்த இயந்திரங்களைத் தூய்மை செய்து, அந்த இயந்திரங்களை நல்லமுறையில் செயல்பட வைக்கும் வழக்கம், இன்றும் பல பெரும் ஆலைகளில் உண்டு.  அதுபோல, நாக்கு ருசிக்கு வசப்பட்டு, கண்டதை கண்ட இடங்களில் தின்று வயிறு கெட்டுப்போய், உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போக நம்மைக் காப்பாற்றவே, அந்த துவாதசி அகத்திக்கீரை விஷயம்.

ஏகாதசி அன்று முழுமையாக உபவாசம் - உண்ணாமல் இருந்து, ஏகாதசி விரதம் என்ற பெயரில் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கிறோம். வயிற்றில் எதுவும் இருக்காது. மறுநாள் துவாதசி அன்று உணவில் அகத்திக்கீரையைச் சேர்த்துக் கொள்வோம். காலியான வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொன்று, அவற்றை வெளியேற்றும் சக்தி அகத்திக்கீரைக்கு உண்டு. மேலும், குடல் புண்ணை ஆற்றி, ரத்தத்தைத் தூய்மை செய்யும் சக்தியும் அகத்திக்கீரைக்கு உண்டு.

ஏகாதசி அன்று உபவாசம் இருந்ததால், காலியாக இருக்கும் வயிற்றுக் குடல் புண்ணை ஆற்றி, ரத்த சுத்தியையும் அதிவிரைவாகத் தரும் சக்தி அகத்திக்கீரைக்கு உண்டு. அதன் காரணமாகவே துவாதசி அன்று அகத்திக்கீரை சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆன்மிகத்துடன் ஆரோக்கியமும் கலந்தது இது. மாதம் இரு முறை வரும் இரு ஏகாதசியிலும் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி அன்று இவ்வாறு அகத்திக்கீரை சேர்த்துக் கொண்டால் போதும். அதைவிட்டு, உடல் நலத்திற்காகத் தினந்தோறும் அகத்திக்கீரை சேர்த்துக் கொள்கிறேன் என்று செய்யக்கூடாது.

ரத்தத்தைத் தூய்மைசெய்யும் அகத்திக்கீரையே, அளவிற்கு அதிகமாகப் போனால், ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து பலம் இழக்க வைத்துவிடும். அளவோடு இருப்போம். வளமோடு வாழ்வோம்.

? வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது, இலையின் நுனி இடது கைப்பக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்களே, அது ஏன்?

- பிரியாதேவி, மதுரை.

சேக்கிழார் இதையே வேறு விதமாகச் சொல்கிறார். நுனி இடது கைப்பக்கமாக என்று சொல்லவில்லை அவர்; ‘ஈர் வாய் வலம் பெற வைத்து’ என்கிறார். இடது என்பது அமங்கலம். வலது என்பது மங்கலம். வலம் வருதல் என்று சொல்கிறோம் அல்லவா? அதன் காரணமாகவே, நுனி இடப்பக்கமாக என்று சொல்லாமல், இலையின் நறுக்கிய பகுதியை வலப்பக்கமாக வைத்து என்று பெரிய புராணத்தில் சொல்கிறார் சேக்கிழார்.

அமங்கலச் சொல் இல்லாத அற்புதமான நூல் பெரிய புராணம். நுனி வாழை இலையில் நுனிப்பகுதி மிகவும் சிறிதாகச்சுருங்கி இருக்கும். நறுக்கப்பட்ட பகுதி அகன்று விரிந்து இருக்கும். சுருங்கிய நுனிப்பகுதி, சரியாகத் தூய்மை செய்யப்படாமல் இருக்கும். அடுத்தது என்னதான் அப்பகுதியை சுருக்கம் நீக்கி வைத்தாலும், அப்பகுதியில் எதையாவது வைத்தால் அது சுருங்கும். உண்பதற்கு இடைஞ்சலாக இருக்கும். அதன் காரணமாகவே உணவின்போது மிகவும் குறைந்த அளவு உபயோகிக்கும் பொருட்களை - அதிகம் ஈரம் இல்லாத பொருட்களை நுனிப் பக்கம் வைத்து, பச்சடி, கூட்டு, பாயசம் முதலான அதிகம் உபயோகிக்கும் ஈரப்பொருட்களை, இலையின் அகன்ற பக்கம் வைத்தார்கள்.

?  வெளியில் சுற்றிவிட்டு வீட்டிற்குள் வந்ததும், உடனே நீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் ஏன்?

- சுபாஷ்,சேலம்.

வெளியில் உள்ள வெப்பம், காற்றழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். அதில் இருந்து மீண்டு வீட்டிற்குள் நுழைந்ததும், வீட்டிற்குள் இருக்கும் குறைந்த காற்றழுத்தமும் குறைந்த வெப்பமும் பழக்கப்படச் சற்று நேரமாகும். அதாவது, வீட்டிற்குள் இருக்கும் வெப்ப - தட்ப நிலையை நம் உடம்பு ஏற்க, சற்று நேரம் ஆகும். அதன் பின்பே நீர் குடிக்க வேண்டும்.

அப்போதுதான் உடம்பு பாதிப்படையாது. அதை விடுத்து, வெளியில் இருந்து வீட்டிற்குள் வந்ததும் நீர் குடிப்பது, அதுவும் குளிர் சாதனப் பெட்டியில் இருந்து நீர் எடுத்து அருந்துவது, உடல் பாதிப்படையச் செய்யும். அதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே, வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தால் உடனே தண்ணீர் குடிக்காதே என்றார்கள். விஞ்ஞான பூர்வமான உண்மை இது.

?   வாழை மரம் வடக்குப் பக்கமாகத் தார் போடக்கூடாது. அப்படிப் போட்டால் அந்த வீடு விளங்காது என்கிறார்கள். இது உண்மையா?

- பத்ரி,திருச்சி.

உண்மைதான். ஆனால், இதற்கும் வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை. இது விவசாயத்தோடு தொடர்புக் கொண்டது. வாழை பயிரிட உகந்த மாதமாக, ஆடி மாதத்தைச் சொல்வோம். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ எனும் பழமொழி தெரிந்தது தானே! அந்த நேரத்தில் வீசும் காற்றை, ஆடிக்காற்று என்றே சொல்வார்கள். இதையே இன்னொரு விதமாகச் சொன்னால், ‘தென் மேற்குப் பருவக்காற்று’ என்றும் சொல்வோம். இந்தக் காற்று முறையாக வீசியாக - சரியாக வீசினால், வாழை மரம் வடக்குப் பார்த்துத் தார் போடும்.

அதை வைத்துப் பயிர், பச்சைகள் எல்லாம் நன்றாக விளையும் என அறியலாம். அவ்வாறு இல்லாமல் வாழை, வேறு திசை நோக்கித்தார் போட்டால், ஆடிக்காற்று சரியாக இல்லை, பயிர் - பச்சைகள் ஒழுங்காக விளையாது. உணவுப் பண்டங்களுக்குத் திண்டாட்டம் ஏற்படலாம் என்பதை யூகித்து அறியலாம். ஆகவே இது, வாழைத்தார்  போடும் விஷயம், விவசாயத்துடன் தொடர்பு கொண்டது. இதை வீட்டோடு இணைத்துக் குழம்ப வேண்டாம்.

தொகுப்பு: சந்திரமௌலி

Related Stories: