தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது நடிப்பு மட்டுமல்லாமல் பட தயாரிப்பிலும் இறங்கி விட்டார். ‘திரலாலா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சுபம்’ என்ற முதல் படத்தை தயாரித்தார். அடுத்ததாக ‘மா இன்டி பங்காரம்’ படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவுக்கும் தற்போது வளர்ந்துவரும் நடிகை லீலாவுக்கும் சில நாட்களாக மோதல் நிலவி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. ஸ்ரீலீலா தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
‘புஷ்பா 1: தி ரைஸ்’ படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் சமந்தா. அடுத்து வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் அந்த வாய்ப்பு ஸ்ரீலீலாவுக்கு சென்றது. அதில், ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலில் அல்லு அர்ஜூனுடன் ஆடியிருப்பார் ஸ்ரீலீலா. சமந்தாவுக்கு வந்த வாய்ப்பை ஸ்ரீலீலா தட்டி பறித்துவிட்டார் என்று அப்போது பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, ஸ்ரீலீலா இருவரும் கை கோர்த்து சிரித்தபடி கேமராவுக்கு போஸ் கொடுத்தார்கள். அந்த வீடியோ வெளியாகி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சமந்தா, ஸ்ரீலீலா இடையே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. பிரச்னை இருந்தால் இப்படி நெருக்கமாக போஸ் கொடுப்பார்களா? அது வெறும் வதந்தி என்று அவர்களது ரசிகர்கள் பேசிவருகின்றனர்.
