ஆண்ட்ரியா: மாடர்ன் கேரக்டர் மட்டும் தான் எனக்கு பொருந்துமா?

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ள படம், ‘அனல் மேலே பனித்துளி’. ஆதவ் கண்ணதாசன், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வரும் 18ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் நடித்தது குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது: எனது நண்பர் ஆதவ் கண்ணதாசன் மூலமாக இதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மதி என்ற பெண்ணை பற்றிய கதை என்பதால், இந்த படத்தை தவறவிட வேண்டாம் என்று நடிக்க ஒப்பந்தமானேன். சிறிய நகரத்தில் இருந்து சென்னைக்கு பல்வேறு கனவுகளுடன் வரும் அவள் வாழ்க்கை நன்றாக செல்லும்போது, திடீரென்று பாலியல் வன்முறை சம்பவம் நடக்கிறது. அதில் ஒரேயடியாக முடங்கிவிடாத அவள் என்ன செய்கிறாள் என்பது கதை.

இது ரொம்ப சென்சிட்டிவ் கதை என்பதால், திரையில் மிகச்சரியாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருந்தது. ‘இதுபோன்ற சீரியசான படங்களை உருவாக்கும்போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்று வெற்றிமாறன் சொன்னார். எனவே, ஒவ்வொரு காட்சியையும் அதிக கவனத்துடன் படமாக்கினோம். கடந்த 2019ல் ஷூட்டிங்கை தொடங்கி, படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்காக உருவாக்கினோம். கொரோனா பரவல் காரணமாக அது சாத்தியப்படவில்லை. எனவே, இப்போது ஓடிடியில் வெளியாகிறது. எல்லா மொழிகளிலும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்கள் வெளியாகிறது.

இது நல்ல விஷயம் மட்டுமல்ல, மேலும் தொடர வேண்டிய விஷயமும் கூட. இதுபோன்ற கதைகளில் ஹீரோயின்களால் மட்டுமே நடிக்க முடியும். ஹீரோவால் நடிக்க முடியாது. இதுபோன்ற படங்கள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். நான் அரக்கோணத்தை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண் என்பதால், மாடர்ன் கேரக்டர்கள் மட்டுமே எனக்கு பொருந்தும் என்று நினைக்கின்றனர். அந்த எண்ணம் மாற வேண்டும். மலையாளத்தில் ‘அன்னையும் ரசூலும்’ படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தேன். ரசிகர்களுக்கு என்னை மிகவும் பிடித்தது. ‘வட சென்னை’ படத்திலும் நான் மாடர்ன் கேரக்டரில் நடிக்கவில்லை. எனவே, என்னை திரையில் எப்படி வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதை இயக்குனர்தான் முடிவு செய்ய வேண்டும்.

Related Stories: