நியூ மான்க் பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
இது என்னுடைய வாழ்வில் நடந்த, கடந்த கால கதை, அன்பால் என்னை இதிலிருந்து மீட்டு கொண்டு வந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. அண்ணன் பாலாஜி தரணிதரன் மற்றும் ராஜுமுருகன் ஆகியோர் என் வாழ்வில் முக்கியமானவர்கள். இருவருக்கும் நன்றி. கோவிந்த் வசந்தா இப்படத்தில் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். இந்த திரைப்படம் வெறும் குடியை மட்டும் பேசுவதில்லை, குடி ஒரு பக்கம் குற்ற உணர்வையும், இன்னொரு பக்கம் அச்சத்தையும் தரும். இது இரண்டும் பின்னிப் பிணைந்த நம்ம சமூகமே, கில்ட் மேனியக் சொசைட்டி தான். இந்த சமூகத்தில் ஒருவன் எப்படி குடிகாரனா மாறுகிறான் என்பதற்கு, நிறைய நிறையக் காரணங்கள் உண்டு. அப்படி ஒரு காரணத்தில் போய் வீழ்ந்தவன்தான் நானும்.
ஒரு 20 வருடம் போதைக்குள்ளேயே உழன்று மயக்கத்தில் எல்லாத்தையும் செய்து, அப்படியே இருந்தவன்தான். ஒருவன் குடிகாரனா மாற சமூக கட்டமைப்பு ஒரு காரணமா இருக்கிறது. கடுமையான பொருளாதார ஏற்ற தாழ்வுகள், ஒரு பக்கம், பணம் போய்க்கொண்டே இருக்கிறது, ஒரு பக்கம் பணம் இல்லை. ஆனால் அதே உழைப்புதான் எல்லோராலும் போடப்படுகிறது. ஆனால் பணம் வரலை எனும் போது, கிடைக்கக்கூடிய அந்த ஏமாற்றம் மனிதனை போதைக்குள் தள்ளுகிறது. அந்த விரக்தியை வெளிப்படுத்த முடியாமல், அப்படி வீழ்த்தப்பட்டவர்களில் நானும் ஒருத்தன். சலிப்புணர்வு மற்றொரு முக்கிய காரணம் இன்று எல்லாருமே போதை நோக்கி ஓடிட்டு இருக்கிறோம். இந்த சலிப்புணர்வை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறதுதான் காரணம். அப்படி ஒரு குடிகாரனின் வாழ்க்கையை நெருங்கி பேசுகிறது இந்தப்படம்.
அதிலும் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் ஆச்சரியம் தருகிறது. இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கும் கதாசிரியர் மைக்கேலுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. வெறுமனே ஒரு கொண்டாட்டமான ஒரு படமா இல்லாமல், குடியை நியாயப்படுத்தவும் செய்யாமல், இது தப்பு அப்படிங்கிறதை ரொம்ப ஆணித்தரமாக சொல்லி, ஆனால் அவன் குடிக்கப் போனதுக்கான காரணம் அவன் மட்டும் கிடையாது, பல பேர் இருக்கிறார்கள் அப்படிங்கறதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது. இந்த மாதிரியான நிறையப் படங்கள் வரவேண்டும். பெரிய கதை இது ஒரு நாள் இரவு நடக்கறதுனால அந்த இரவுக்குள்ள என்னென்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்லியுள்ளார்கள். இந்த படம் வெற்றி அடைந்து பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளர் நல்ல லாபம் அடைய வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும்.
இயக்குநர் அரவிந்தன் பேசியதாவது…
இந்த படத்தில் வேலை செய்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. பிரித்விராஜ், கார்த்தி அண்ணா, மதன் குணதேவ அண்ணா, பூர்ணா, முக்கியமா எங்கள் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். குட் டே டீம்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் படம் பார்த்து விட்டேன். மிக அருமையான படம். கார்த்திக் நேதா அண்ணா என்ன சொன்னாரோ அதையே தான் நானும் உணர்ந்தேன். இந்த படம் போதையைப் போற்றி பேசுவதில்லை. போதையிலிருக்கும் ஒருவரின் வலியும், அவரைச் சுற்றியவர்களின் துயரங்களும் பற்றியது. படம் பார்த்ததும், எனக்கு “It’s a Wonderful Life” னு ஒரு பழைய ஆங்கில படம் நினைவுக்கு வந்தது. ஒரே நாளில் நடக்கிற கதையாக இருந்தாலும், அதுக்குள்ள அந்த உணர்வின் ஆழம் இருந்தது. படத்தின் இயக்கம், திரைக்கதை, இசை எல்லாமே அருமை. “மின்மினிய ராசாத்தி” பாடல் உண்மையிலேயே நெகிழ வைத்தது. நல்ல படங்கள் ஓடும் – இந்த படமும் நிச்சயமாக ஓடும். நன்றி.
கலை இயக்குநர் சங்கர் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். “குட் டே” என்னுடைய இரண்டாவது படம். இப்படத்திற்கு உரிய கதைக்களம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் பிரித்திவி அண்ணா, மற்றும் இயக்குநர் அரவிந்தன் பிரதர், இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தில் வேலை செய்த அனைத்து குழுவினருக்கும் நன்றிகள்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது…
“இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை ‘glorify’ செய்வதற்கல்ல. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால்தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வை இந்த படம் கொடுத்தது. விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்து குடியை விட்டுள்ளேன் நான். இது போன்ற படங்கள் தான் அந்த அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன. “போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் – அது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது.
இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது,” படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம்தான் பெரிய படம். இந்த படமும் அந்த வகையிலான படம் தான் .” கார்த்திக் நேதா ஒரு அழகான கவிஞர். கோவிந்த வசந்தா இசை – படம் முழுக்க ஆன்மாவாக இயங்குகிறது. இந்த படத்தில் பணியாற்றிய எல்லோரும் மிகச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்,” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். எல்லா தரப்பினருக்கும் ரிலேட்டாகக்கூடிய படம். ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘குட் டே’ படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம் நன்றி.
