சிலப்பதிகாரத்தில் சாத்தன் வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஐம்பெரும் தமிழக்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகார காலத்தில் சாத்தன் வழிபாடு சிறப்புடன் இருந்ததை அந்நூலின் மூலம் அறிகிறோம்.சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இருந்த இரண்டு சாத்தன் கோயில்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று ஊருக்குள் இருந்த பாசாண்ட சாத்தன் கோயில், மற்றது ஊருக்குப் புறத்தே இருந்த புறம்பணையான் கோட்டம் என்கிற சாத்தன் கோயில்.பாசண்டம் என்பது தர்க்க சாத்திர நூல். அந்நாளில் தொண்ணூற்றாறு வகையான தர்க்க சாத்திரநூல்கள் வழக்கில் இருந்தன. அதில் வல்லவர்கள் பாசாண்டர்கள் எனப்பட்டனர் அவை யாவற்றிலும் இந்த சாத்தன் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். அதனால் பாசாண்ட சாத்தன் என்று அழைக்கப்பட்டான்.

இவனது ஆலயத்தில் மேற்படி தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் கூடி அந்நூல்களை ஓயாது அலசி வாதிட்டுக்கொண்டிருந்தனர். அத்தகைய பாசாண்டர் கூட்டம் அதிகமாக கூடி இருந்ததால் அவனுடைய ஆலயத்தில் சதா பேச்சுக்கள் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. அதனால் அங்கு ஓயாத ஒலி இருந்தது.மற்றோர் கோயிலான புறம்பணையான் கோயில் ஊருக்கு வெளியே இருந்தது. மதிலுக்கு புறத்தே அணைந்து இருந்ததால் அது புறம்பணையான் கோட்டம் எனப்பட்டது. அக்காலத்தில் மாலதி என்ற அந்தணப் பெண் பூம்புகாரில் வசித்துவந்தாள். அவள் ஒரு நாள் வேறொருவரின் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். பால் புரையேறி விக்கி குழந்தை இறந்துபோனது.

‘‘குழந்தையைக் கொன்றுவிட்டாள் என்ற பழி தன்னைச் சூழுமே’’ என்று அஞ்சினாள். பூம்புகார் நகரத்தில் இருந்த அத்தனை கோயில்களுக்கும் குழந்தையின் உடலை எடுத்துச் சென்று கிடத்தி அங்கே இருந்த தெய்வங்களிடம் குழந்தைக்கு உயிர் தருமாறு வேண்டினாள்.அனைத்துத் தெய்வங்களும் மாண்ட உயிரை மீட்டுத் தரமுடியாது என்று கூறி விட்டன. அதைக் கேட்டு சோகத்துடன் பிள்ளையின் உடலைச் சுமந்துகொண்டு வீடு திரும்பும் வேளையில் பேய் ஒன்று அவளைத் தொடர்ந்து வந்து குழந்தையைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டு ஓடிவிட்டது.

கையில் இருந்த உயிரற்ற குழந்தையின் உடலும் இல்லாமல் எப்படி வீட்டிற்குச் செல்வது என்று தயங்கிய அவள், வழியில் இருந்த புறம்பணையான் என்னும் ஐயனார் கோயிலுக்குச் சென்று பாடு கிடந்தாள். அவர்மீது இரக்கம்கொண்ட சாத்தன் அழகிய குழந்தையாக அவள்முன் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்த அவள் அதை எடுத்துக்கொண்டு தனது இல்லத்திற்குத் திரும்பினார்.

குழந்தையை அன்புடன் வளர்த்தனர். அவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆனது. அப்போது மாலதி அவனுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினாள். அவனுக்கு தேவந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள்.சாத்தனுக்குப் பதினாறு வயதான வேளையில் அவன் தேவந்திக்குத் தன்னைத் தான் யார் என்பதை அவளுக்குக் காட்டினான். பின்னர் அவளிடம் கணவன் தீர்த்த யாத்திரை சென்றுள்ளார் என்று சொல்லிக் கொண்டு அவளது எஞ்சிய வாழ்நாளைத் தனது கோயில் பணியில் கழிக்குமாறு சொல்லிவிட்டு மறைந்தான்.

இந்த தேவந்தியே கண்ணகியிடம் உன் கணவன் விரைவில் திரும்பி வருவான் என்று கூறியவளாவாள்.சிலப்பதிகாரத்தின் மூலம் சாத்தன் தர்க்க சாஸ்திர அறிஞர்களின் வழிபடு கடவுளாக இருந்ததையும், மிகவும் இரக்க குணத்தினால் ஒரு பெண்ணுக்குக் குழந்தையாக இருந்து அவளது துயர் தீர்த்த கடவுளாகவும் இருந்தது அறியமுடிகிறது.

தொகுப்பு: ராகவேந்திரன்

Related Stories: