பூஜை செய்யுமுன் ஒரு நிமிடம்...

நாம் தினசரி பூஜை செய்கிறோம். பூஜை செய்யாத நாள் நமக்கு என்னவோபோல் இருக்கும். பெரியாழ்வார் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார். ‘‘கண்ணனே! நான் சாப்பிடாமல் இருக்கும் நாள் எனக்கு பட்டினி நாள் அல்ல. உன்னை வணங்காமல், பூஜை செய்யாமல் இருக்கும் நாள்தான் எனக்குப் பட்டினி நாள்.” என்ன பொருள்? மிகவும் எளிமையான பொருள். எல்லோருக்கும் புரியும்படியான பொருள் இதுதான். “பகவானே, உன்னை வணங்காமல், பூஜை செய்யாமல் நான் சாப்பிடுவதில்லை” என்பதுதான் பொருள்.

ஏதோ ஒரு காரணத்தால், தீட்டு, துக்கம் என்றால், அன்று முழுதும் சாப்பிட மாட்டார்கள். காரணம், பூஜை செய்ய முடியாதே.. எனவே, பூஜை செய்யாத நாள், உணவு இருந்தாலும், பட்டினி நாள் தான். அந்தப் பாசுரம் இது.

கண்ணா! நான்முகனைப் படைத்தானே!

காரணா! கரியாய்! அடியேன் நான்

உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை

“ஓவாதே நமோ நாரணா” என்று

எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம வேத

நாள்மலர் கொண்டு உன் பாதம்-

நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்

அன்று எனக்கு அவை பட்டினி நாளே.

எனவே தினசரி பூஜை செய்ய வேண்டும்.

அந்தக்காலத்தில் பெரியோர்கள் தங்களுக்கென ஒரு உபாசனை தெய்வத்தை வைத்திருப்பார்கள். வெளியூர் போனாலும், அங்கே அந்த சுவாமிக்கு பூஜை செய்து விட்டுத்தான் உணவு உட்கொள்வார்கள். வைணவத்தில், பெரியவர்கள், சிறிய விக்ரகத்தை, தன்னுடைய திரு ஆராதனப் பெருமாளாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் சாளக்கிராமத்தை, ஒரு பெட்டியில் வைத்து எங்கே போனாலும், அந்த சாளக்கிராம பூஜையை செய்து விட்டுத்தான், அன்றைய காரியங்களைத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் உபாசனப்பெருமாளுக்கு ஒரு பேரும் வைப்பார்கள். ஒரு ஆச்சார்யர் வைத்த பெயர் பேரருளாளன். ஒருவர் வைத்த பேர் வெண்ணைக்காடும் பிள்ளை. திருமங்கை ஆழ்வார் வைத்த பேர் சிந்தனைக்கு இனியான்.

குழந்தைக்கு பெயர் வைப்பது போலவே, தங்கள் நித்திய வழிப்பாட்டு தெய்வத்துக்கும் பெயர் வைத்தார்கள். இன்றும் சீர்காழிக்கு பக்கத்தில் திருநகரியில், திருமங்கை ஆழ்வார் சந்நதியில் 1300 வருடங்களுக்கு அவர் தினசரி பூஜை செய்த பெருமாளை தரிசிக்கலாம். திருமுருக கிருபானந்த வாரியார், முருகப்பெருமான் திருவுருவத்தை, தனிப் பெட்டியில் வைத்து இருப்பார். வருடத்தின் 365 நாளும் அவருக்குச் சொற்பொழிவு இருக்கும். வெவ்வேறு ஊர்களில் சொற்பொழிவு செய்வார். அத்தனை ஊர்களிலும் அவரோடு இந்த பெட்டியும் பயணிக்கும். காலையில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் பூஜை செய்து, அதன் பிறகு தான் உணவு உட்கொள்வார். வெளிநாட்டுப் பயணத்தின் போதும், அவர் இந்தப் பெட்டியை தன்னோடு எடுத்துச் செல்வார். அதனால் அவர்கள் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். தங்கள் காரியங்களில் மிகச்சிறந்த வெற்றியையும் அடைந்தார்கள்.

அவர்களுடைய சிந்தனை குழப்பமில்லாமல் தெளிவாக இருந்தது. காரணம், அவர்களுடைய பக்தி, மனமொன்றி தினசரி செய்யும் பூஜை. இதன் மூலம் தினசரி வாழ்வின் மன அழுத்தங்களைக் குறைக்கலாம். கவனத்தைச் சீராக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையும் பவித்ரமானது. பூஜை செய்யும்போது சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக நெற்றித் திலகம் இடாமல் பூஜை செய்யவே கூடாது. “நீரில்லா நெற்றி பாழ்” என்பார்கள். திருமண், திருநீறு அல்லது அவரவர் வழக்கப்படி திலகமிட்டுத் தான் பூஜை செய்ய வேண்டும்.

நெற்றிக்கு இடுவதன் மூலம் மனோபலம் பெருகும். முகத்தில் களை (தேஜஸ்) தோன்றும். முகம் பிரகாசமாக இருக்கும். நெற்றிக்கு இட்ட உங்கள் முகத்தையும், இடாத முகத்தையும் கண்ணாடியில் பார்த்தாலே எளிதில் உணரலாம். அடுத்து ஆரோக்கியம் சீர்படும். மிக முக்கியமாக பெண்கள், நெற்றிக்கு குங்குமம் அணிய வேண்டும்.நல்ல மஞ்சள் குங்குமம் நெற்றியைக் காப்பாற்றும். வேதிப் பொருள்கள் உள்ளவற்றைப் பயன்படுத்தக்கூடாது. இரு புருவங்களுக்கு மத்திய பாகம் தான் பொட்டு. அங்குதான் நினைவாற்றல் மையம் இருக்கிறது. நினைவாற்றலுக்கு சிந்தனைக்கும் உரிய முக்கிய புள்ளி உள்ளது. இந்தச் சிந்தனை மையம் சீராக இயங்குவதற்கு உதவுவதுதான் குங்குமமும் சந்தனமும். அதைப்போலவே திருமண்ணும் சூர்ணமும். திருமண் மேல்நோக்கி இடும்போது சிந்தனை தெளிவாக இயங்குகிறது. நினைவுதிறன் மேம் படுகிறது. காரணம் அங்கேயேதான் `பீனியல் கிளாண்ட்’ என்ற சுரப்பி அமைந்துள்ளது. யோக சாஸ்திரத்திலும் தியான சாஸ்திரத்திலும் நெற்றி புருவம் முக்கியம். குறிப்பாக பெண்கள் மூன்று இடத்தில் திலகமிட வேண்டும்.

ஒன்று முன்பக்க வகிடு. அடுத்து புருவமத்தி நடு நெற்றி. அங்கே மகாலட்சுமியின் பேராற்றல் குடிகொண்டிருக்கிறது. இங்கே குங்குமம் இடுவதால் மங்கலங்கள் பெருகும். இதன் சிறப்பை ஒரு அழகான திரைப்படப் பாடலாக கவியரசு எழுதினார். பெண்கள் குங்குமம் அணிவதன் சிறப்பைச் சொல்லும் பாடல்;

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்

குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்

திங்கள் முகத்தில் செம்பவளம் என திகழும் மங்கல குங்குமம்

தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கலக் குங்குமம்

காசி விசாலாட்சி கருணை முகத்தில்

கலங்கரை காட்டும் குங்குமம்

கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம்

ராஜாமணி எனும் அன்னை முகத்தில் நலம்பெற விளங்கும் குங்குமம்

நற்குல மாதர் கற்பினைப் போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம்

இப்பாடல் அந்தக் காலத்தில் பிரபலம். குங்குமம் இடுவதால் பல உடல் கோளாறுகள் நீங்கும். கர்ப்பப்பை பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள். மன ஒருமைப்பாடு ஏற்படும்.

குறிப்பாக பூஜை அறையில் மன ஒருமைப்பாடு முக்கியமல்லவா.

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்

கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்

தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட

ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே

 - என்று இந்த மனம் தாவும் நிலையை திருமங்கை ஆழ்வார் பாடுவார்.

“ஒரு அரை நிமிஷம் கவனமாக பூஜை செய்ய முடியவில்லையே” என்று அருணகிரிநாதர் கதறுகிறார் அல்லவா.

“சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க அறியாத

சடகசட மூட மட்டி’’...

- என்று அவர் துடிக்கிறார்.

அது அவர் துடிப்பு அல்ல. நம் துடிப்பு. உண்மையில் நமக்குத்தான் அந்தத் துடிப்பு வரவேண்டும். நெற்றிக்கு இடுவதால் இந்த பக்தி உணர்வு செயல்படும். சந்தனத்தை புருவமத்தியில் வைக்கும்போது ஜில்லென்று ஒரு குளிர்ச்சி பரவும். அதில் ஒரு சுகம், லயம் கிடைக்கும். இதையெல்லாம் தெரிந்துதான் நமது ஆன்றோர்கள், பூஜைக்கு முன்னதாக வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொள் என்றார்கள். அப்படி அணிவதிலும் ஒவ்வொரு முறை உண்டு. உங்கள் குரு, ஆச்சாரியர், அல்லது வீட்டுப் பெரியவர்களிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எனவே, நெற்றிக்கு இட்டுக் கொண்டு பூஜை அறையில் நுழையுங்கள். மனம் லயப்படும். பூஜைவசப்படும்.

Related Stories: