பரிவு கொண்டோர்க்கு சிவன் பொய்யாகான்

சிவப்பரம்பொருள் விசார சருமருக்குக் கொன்றைமாலை சூட்டி, சண்டீசப் பதம் கொடுத்தருளிய விதத்தை,நம் கண்முன் அப்படியே கொண்டுவரும் கங்கைகொண்ட சோழபுரத்துப் புகழ்வாய்ந்த சிற்பம்.

பன்னிரு திருமுறைகளில்  பத்தாம் திருமுறையாக விளங்கும்  திருமூல நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள ஒருபாடலை நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

பாடல் இதோ

‘‘உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி

அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை

செறுவகை செய்து சிதைப்ப முனிந்து

மறு மழுவால் வெட்டி மாலை

பெற்றானே ‘’.

இப்பாடல், திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரம், மூன்றாம் பகுதியான இலிங்க புராணம் பகுதியில் வருவதாகும்.

இதன் தெளிபொருள்

திருவருளால் மிக்கதும் தக்கதுமாகிய சிவபூசையினைத் தண்டேசுரர் முன் தொடர்பால் அறிந்தனர். மண்ணியாற்றிடைக் குறையை நண்ணினர். ‘தழைத்ததோர் ஆத்தியின்கீழ் தாபரம் மணலாற் கூப்பினர்.’ பிறப்பறும்வகை அங்கே ஆவினை அழைத்து ஐந்தும் நிரம்பிய பாலினைக் கறந்து சிவபெருமானுக்கு ஆட்டி, திருவைந்தெழுத்தோதி நற்றவமாகிய வழிபாட்டினைப் புரிந்தனர். அவர்தம் உடற்றந்தையாகிய எச்சதத்தன் தீ வேள்வியினைப் பெரிதென்று எண்ணும் எண்ணத்தன். அதனால் சினங்கொண்டு பகைத்துச் சிவ வழிபாட்டினைச் சிதைத்தனன். சிவனருளால் மாடு மேய்க்கும் கோல் மழுவாக மாறியது. அதனைக் கொண்டு தந்தையின் தாளைத் தந்தை செய்த திருவடிப்பாவம் அறும்படி வெட்டினர். சிவபெருமான் அவர்க்குத் தொண்டர் தலைமையும் மாலையும் கொடுத்து ஆட்கொண்டருளினன்.

[மறுமழு: மாறுமழு: கோல் மழுவாக மாறியது; மாறு என்பது மறு எனச் செய்யுளால் குறுகி நின்றது.உறுவது - சிவபூசையால் வருவது அறுவகை - பிறப்பு அறும்படி.செறுவகை - பகைமை.]

விளக்கம்: தவறு செய்தவன் அதை உணர்ந்து, அருள் வேண்டியபோது, அவனுக்கு அருள் செய்த சிவப் பரம்பொருள், தவறு செய்தவரைத் தண்டித்தவர்க்கு அருள் புரிந்ததைத் திருமூலர் இந்தப்

பாடலில் சொல்கிறார்.

இப்பாடலில் சண்டிகேஸ்வரரின் வரலாற்றை, மிகமிகச் சுருக்கமாகச் சொல்கிறார் திருமூலர். இந்த நான்கு வரிப் பாடலின் விரிவுதான் சேக்கிழார் சுவாமிகளின் பெரிய புராணம், சண்டிகேஸ்வரரின் வரலாறாக விவரித்திருக்கிறது. திருச்சேய்ஞலூரில் எச்சதத்தன் - பவித்ரை தம்பதியருக்கு மைந்தனாக அவதரித்தார், விசாரசருமர். ஒருநாள் தன் வயதொத்த மாணவர்களுடன் வேதம் ஓதியபடி போய்க் கொண்டிருக்கையில், அவ்வூர்ப் பசுக் குலங்களை மேய்க்கும் சிறுவன் தன்னை முட்டிய பசு ஒன்றைக் குச்சியால் நன்றாக அடித்தான். அதைப் பார்த்த விசாரசருமர், ‘‘பசுக்களின் அருமை அறியாத நீ, இனிமேல் அவற்றை மேய்க்க வேண்டாம். நானே மேய்க்கிறேன்’’ என்றார்.அதன்படியே மிகுந்தச் பொறுப்போடும் அன்போடும் விசாரசருமர் பசுக்குலங்களை மேய்த்தார்.

அவருடைய தூய்மையான அன்பால், பசுக்களும் அவரிடம் மிகுந்த அன்போடு இருந்தன. அவை முன்பைவிட அதிகமாக பாலைக் கறந்தன. அது மட்டுமல்ல, விசாரசருமரைப் பார்த்தவுடன், அப்பசுக்கள் தம் கன்றைக் கண்டதைப் போல, மடியில் இருந்து தாமாகவே பாலைப் பொழிந்தன. பால் வீணாவதைக் கண்ட விசாரசருமர், அதைவைத்து சிவ வழிபாடு செய்ய

எண்ணினார்.

உடனே, தான் மாடு மேய்க்கும் மண்ணியாற்றங்கரையில், மணலால் ஒரு சிவலிங்கம் அமைத்தார். தானாகப் பொழிந்த பாலைக் குடங்களில் பிடித்து  அபிஷேகம் செய்தார். நாட்கள் பல கடந்தன. ஊராருக்குத் தகவல் தெரிந்தது. உண்மையை உணராத அவர்கள் எச்சதத்தனை அழைத்து, ‘‘உன்  மகன் செய்யும் செயல் உனக்குத் தெரியாதா?’’ என்று ஆரம்பித்துப் புகார் செய்தார்கள். ‘‘நாளை முதல் அவ்வாறு நிகழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று எச்சதத்தன்வாக்குறுதி அளித்தான்.

மறுநாள் விசாரசருமர் மாடு மேய்க்கப்புறப்பட்டதும் அவரறியாமல் எச்சதத்தன் பின்தொடர்ந்தான். விசாரசருமர் வழக்கப்படி, மாடுகள் தாமாகவே  சொரிந்த பாலைக் குடங்களில் பிடித்து வைத்து, மணலால் சிவலிங்கம் அமைத்து, அபிஷேக அர்ச்சனைகளைத் தொடங்கினார். மகனின் செயல்களைமறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தன், வெகுவேகமாகப் போய் மகனை ஏசினார். விசாரசருமர் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ள வில்லை. எச்சதத்தனுக்குக் கோபம் அதிகமானது. அந்தச் செயலைத் தடுப்பதற்காக, விசாரசருமனின் முதுகில் நன்றாக நாலு சாத்து சாத்தினான்.  தன் வழிபாட்டிலேயே ஆழ்ந்திருந்த விசாரசருமர் அப்போதும் திரும்பவில்லை.

முதுகில் விழுந்த அடியால், அவர் முனைப்பைத் தடுக்க முடியவில்லை. கடைசியில், அங்கிருந்த பால் குடங்களையெல்லாம் எச்சதத்தன் கால்களால்  உதைத்து, உடைத்துக் கவிழ்த்தான். அப்போதுதான் விசாரசருமருக்கு சீற்றம் மூண்டது. அவர் தன் பக்கத்தில் இருந்த பசு மேய்க்கும் கோலை எடுத்தார். அது சிவனருளால் மழுவாக மாறியது. அந்த மழுவாலேயே எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டினார். எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான்.

விசாரசருமரோ, இனி இடையூறு இல்லை என்று மகிழ்வோடு, சிவபூஜையைத் தொடர்ந்தார். அப்போது சிவப் பரம்பொருள் அங்கே காட்சியளித்து ‘‘நம் பொருட்டு, உன் தந்தையின் கால்களைத் துண்டித்த உனக்கு, இனி யாமே தந்தை; நீ நம் மகன்’’ என்று கூறி விசாரசருமரைத் தழுவினார். மார்போடு அணைத்து உச்சி முகர்ந்து சீராட்டினார். விசாரசருமர் மாயா உடம்பு நீங்கி, அருள் உடம்பு பெற்று சிவகுமாரராயினார். சிவப்பரம்பொருள் , ‘‘நம்மை வழிபடும் அடியவர் நமக்குச் சாத்திய, நிர்மால்ய பொருட்கள் உனக்கு மட்டுமே  உரியனவாக ஆகட்டும்’’ என்றார். அத்துடன் சிவனடியார் பலருக்கும் தலைமையாய், அடியார்கட்கு தம் திருத்தொண்டின் பயனை அளிக்கும் ‘சண்டீசன்’ எனும் பதவியை விசாரசருமருக்கு அளித்தார்.

அதற்கு அடையாளமாகத் தமது திருமுடியிலிருந்த கொன்றை மாலையை எடுத்து, விசாரசருமருக்குச் சூட்டியருளினார், சிவப்பரம்பொருள். சண்டீசர் என்பது, அவரது பதவியால் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு பசுக்குலங்களை மேய்த்து, அத்தண்டே மழுவாக மாறப் பெற்று, தவறு செய்தவனைத் தண்டித்ததன் காரணமாக இவருக்குத் ‘‘தண்டீசர்’’ என்ற திருப்பெயரும் உண்டு. அதனைக் குறிக்கும் முகமாக திருமூலரும் சண்டீசரை ‘தண்டி’ என்றே குறிப்பிட்டார்.

சரக்கொன்றை:

“பொன்னார் மேனியனே புலித்

தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்

கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழ

பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.”

- சுந்தரமூர்த்தி  சுவாமிகள்.

பொழிப்புரை :

பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?

“பொன்னினார் கொன்றை யிருவடங்கிடந்து

பொறிகிளர் பூணநூல் புரள

மின்னினார் உருவின் மிளிர்வதோர்

அரவம் மேவுவெண்ணீறுமெய் பூசித்

துன்னினார் நால்வர்க் கறம்அமர்ந்

தருளித் தொன்மையார் தோற்றமுங்கேடும்

பன்னினார் போலும் பந்தணை

நல்லூர் நின்றயெம் பசுபதியாரே.”

- திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்.

இம்மரம் அச்சிறுப்பாக்கம், கோவிலூர் (திருக்கோவிலூர்), திரு அஞ்சைக்களம் (திருவஞ்சிக்குளம்), தினைநகர், திருமாணிக்குழி, திருத்துறையூர் (திருத்தளூர்), பந்தநல்லூர், புத்தூர், வெண்காடு (திரு வெண்காடு), திருக்கண்ணார் கோவில் (குரு மாணக்குடி), திருக்கோலக்கா, திருஆக்கூர் (ஆக்கூர்), திருமணஞ்சேரி, ஆவூர், திருஆப்பனூர் (செல்லூர்), திருப்புத்தூர் (திருப்பத்தூர்), திரு அதிகை வீரட்டானம் (திரு அதிகை), திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை), திருவலிதாயம் (பாடி), திருச்சோபுரம், திருத்துறையூர் (திருத்தர்) ஆகிய ஊர்களில் காணப்படும்சிவபெருமான் திருக்கோவில்களில் தலமரமாக விளங்குகின்றது.

பி. என். பரசுராமன்

Related Stories: