யோக வாழ்வருளும் ராமநவமி

பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீ ராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீ ராமபிரான் அவதார தினமான ஸ்ரீ ராமநவமி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமருக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும் பல கோயில்களில், ராம பஜனைகள் நடைபெறும். ஸ்ரீ ராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்

கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீ ராமநவமி தினத்தில் வாசல், பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீ ராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஏன் சித்திரையில் ராமநவமி?

ராமநவமியானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்தபோது அவதரித்தான்.

வசந்த ருதுவும் ராம நவமியும்

பகவான் கீதையில், ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும், சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான்

மார்கழியாகவும், பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத் தனிச்சிறப்பு உண்டு.

ராமநவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)

1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ  ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீ ராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ  ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ  ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீ ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

ராம நவமியில் ராமநாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீ ராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீ ராமநவமி வேறு. ஸ்ரீ  ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ  ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ ராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர். தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?

அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதிதேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ  ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்குக் கணித அடிப்படையில் பதில் உள்ளது.  எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

அதாவது 2x5 2x5 2x5. என்றால் 2x5 =10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராமராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

(கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

இராமாயணம் முதலில்

அரங்கேறியது எப்போது?

இராமாயணத்திற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜமண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்திஅரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன்

கொன்றான்தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்விஉலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்

        

பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான்

சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப்  படிக்க வேண்டும் என்பதால்,

கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற                          நாட்டுளே

என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ  பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ  ராமானுஜர்  இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டிருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக்  கொண்டுதான்  ஸ்ரீ  பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி  வெள்ளம்  குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.இப்படி நம்மையும் வழிநடத்தி நல்வழி காட்ட இந்த ராமநவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ  ராமனின் குணங் களைக் கொண்டாடுவோம். ஸ்ரீ  ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும்

முனைவோம். அதுதான் நிஜமான ஸ்ரீ  ராமநவமி.

Related Stories: