டென் ஹவர்ஸ்: விமர்சனம்

திடீரென்று ஒரு இளம்பெண் கடத்தப்பட, உடனே அப்பெண்ணின் அம்மாவும், தாத்தாவும் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்கின்றனர். அந்த புகாரை இன்ஸ்பெக்டர் சிபிராஜ் விசாரிக்க தொடங்கும்போது, தனியார் ஆம்னி பேருந்தில் பெண் நிருபர் ஒருவர் சித்திரவதை செய்யப்படுகிறார். இது பற்றி போலீசுக்கு தகவல் சொன்ன ராஜ் ஐயப்பா கொல்லப்படுகிறார். சிபிராஜ், 10 மணி நேரத்திற்குள் இந்த குற்றச்செயல்களுக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது மீதி கதை. தனது பாணியில் வழக்கை விசாரித்து சுட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டராக, படம் முழுக்க வெறிபிடித்த வேங்கையாக திரிகிறார் சிபிராஜ். அவரது மாறுபட்ட பாடிலாங்குவேஜூம், நடிப்பும் அவரது கேரக்டரை சிறப்பாக மாற்றியுள்ளது.

அவரது வழக்கு விசாரணை துரிதமாக நகர்வதால், திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. கார்த்திக்கு ‘கைதி’ மாதிரி சிபிராஜூக்கு ‘டென் ஹவர்ஸ்’. ஜோடி இல்லை. டூயட் இல்லை. ராஜ் ஐயப்பா, கஜராஜ் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. ‘ஜீவா’ ரவி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘வத்திக்குச்சி’ திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா ஆகியோர் அவரவர் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். முழுநீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்கு ஏற்ற இயல்பான ஒளிப்பதிவை ஜெய் கார்த்திக் கேமரா வழங்கியுள்ளது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, விறுவிறுப்புக்கு உதவி செய்துள்ளது. இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். குற்றச்செயல்களின் பின்னணியில் இருக்கும் வில்லனை மேலும் பலம் வாய்ந்தவராக காட்டியிருக்கலாம். இதுபோன்ற சில குறைகளை தாண்டி படம் கவர்கிறது.

Related Stories: