சென்னை: ‘நான் கடவுள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நிமிர்ந்து நில்’ உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ், தற்போது பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் சீனாவில் படமான ‘எங் மங் சங்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. 17ம் நூற்றாண்டில் தொடங்கும் இக்கதை 1980ல் முடிவடைகிறது. சீனாவில் குங்ஃபூ கலையை கற்ற இந்திய இளைஞர்கள் மூவர், எங் மங் சங் என்ற பெயருடன் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அங்கு கற்ற கலையை வைத்து இங்கு என்னென்ன செய்தனர் என்பது திரைக்கதை. முழுநீள காமெடி படமான இதை அர்ஜூன் எஸ்.ஜே இயக்கியுள்ளார்.
இவர், அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு திரைக்கதை எழுதியவர். முக்கிய வேடங்களில் ஆர்ஜே பாலாஜி, தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், ‘கும்கி’ அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஷ்காந்த், ‘பாகுபலி’ பிரபாகர் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசை அமைக்க, கே.எஸ்.சீனிவாசன் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் மே மாதம் படம் திரைக்கு வருகிறது.