மருத்துவம் படிக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், ஜீவா தங்கவேல், மெகாலி மீனாட்சி உள்பட அனைவரும், தாங்கள் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருகிறது. போராட்டத்துக்கு தீர்வு கிடைத்ததா என்பது மீதி கதை.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம், ஹீரோ ஆகிய பொறுப்புகளை ஏற்ற பாலு எஸ்.வைத்தியநாதன், படம் முழுக்க அரசியல் மாற்றம் குறித்த கருத்துகளை மீண்டும், மீண்டும் சொல்லி சலிப்படைய வைத்திருக்கிறார். அடிக்கடி மெகாலி மீனாட்சியுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக, செந்தாரகை என்ற கேரக்டரில், பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்த அஞ்சனா கீர்த்தி, அடிக்கடி கைகளை நீட்டி பேசியதை இயக்குனர் குறைத்திருக்கலாம்.
ஜீவா தங்கவேல், மெகாலி மீனாட்சி, ஜாகுவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன், ‘பாய்ஸ்’ ராஜன், ‘போராளி’ திலீபன் உள்பட பலர், இயக்குனர் சொன்ன மாதிரி நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓ.கே. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சமூக மற்றும் அரசியல் மாற்றத்துக்கு முதலில் மக்கள் மனம் மாற வேண்டும். அதை அளவுடன் சொல்லி இருந்தால் ரசித்திருக்கலாம். ஆனால், அரசியல் பிரசாரத்தை விட அதிகப்படியாக இருப்பதாலும், படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பதாலும், எதுவுமே மனதில் பதிய மறுக்கிறது.