சாலிவாகன சகாப்தம் என்றால் என்ன?

விக்கிரம சகாப்தம் - சாலிவாகன சகாப்தம் என இரண்டு பெயர்களைப் பஞ்சாங்கத்தில் பார்த்திருப்போம். இவற்றில் விக்கிரம சகாப்தம் என்பது  வி்க்கிரமாதித்தன் பெயரால் வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்தனைப்பற்றி ஓரளவிற்காவது தெரியும். ஆனால், சாலிவாகன சகாப்தத்தை உருவாக்கிய சாலிவாகனனைப்பற்றி?

சாலிவாகன சகாப்தம் என்று தன் பெயரில் ஒரு சகாப்தத்தையே உருவாக்கிய அந்த மாவீரர்; அசுவ சாஸ்திரம் எனும் குதிரைகளைப் பற்றிய சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம், நவரத்தின சாஸ்திரம் எனும் நூல்களை உருவாக்கிய அறிவாளி; யாராலும் வெல்ல முடியாத விக்கிரமாதித்தனைப் போரில் கொன்றவர் எனப் பலவிதமான பெருமைகளைக் கொண்ட சாலிவாகனனைப் பற்றிய தகவல்கள், நம் பழந்தமிழ் நூல்களில் உள்ளன. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஓர் அரச பரம்பரையினர், இந்த சாலிவாகனன் பரம்பரையில் வந்தவர்களே!

சாலிவாகனனைப் பற்றி அறியலாம் வாருங்கள்!

ஒரு சமயம் ஆதிசேடன் மானிட வடிவம் தாங்கி, சுமித்திரை என்பவளைக் காந்தர்வ முறைப்படி மணந்தார். சுமித் திரை தன் தந்தையிடம், தனக்குத் திருமணம் நடந்த தகவல்களைச் சொல்லவில்லை. காலம் கடந்தது. சுமித்திரை கருவுற்றாள்; கணவரிடம் நடந்ததைச் சொல்லி, ‘‘என் தந்தைக்குக் கூடத் தெரியாது’’ என்று வருந்தினாள்.

ஆதிசேடன் பதில் சொன்னார்; ‘‘பெண்ணே! சுமித்திரா! என்னை மனிதன் என்று எண்ணாதே! நான் ஆதிசேடன்’’ என்ற ஆதிசேடன், தன் உண்மையான வடிவத்தைக் காட்டினார்; அத்துடன், ‘‘உனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை தலைசிறந்த மன்னனாக ஆவான். அவனால் உன்குலம் மேன்மை அடையும்’’ என்று சொல்லி மறைந்தார் ஆதிசேடன்.

சுமித்திரை உண்மை உணர்ந்தாள்; தந்தையிடம்போய் நடந்தவற்றையெல்லாம் விவரித்துச் சொன்னாள். தந்தை மகிழ்ந்தார்; ‘‘அம்மா! நீ சொல்வது எல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடியதா என்ன? உனக்கு நடந்திருக்கிறது என்றால்... அதைப்பற்றி நீயோ அல்லது நானோ, சொல்ல என்ன இருக்கிறது? எல்லாம் தெய்வச் செயல்’’ என்றார்.

ஆனால், ஊர் சும்மாயிருக்குமா? அடுத்தவன் வீட்டுக் கதவைத் தட்டி, அக்கப்போர் பேசும் உலகமல்லவா? இவர்கள் எல்லாம் என்றும் இருப்பார்கள்; எங்கும் இருப்பார்கள். அக்கப்போர் பேசும் கும்பல் ஒன்று, அரசனிடம் போனது; ‘‘மன்னா! நம் ஊரில் வாழும் சுலோசனன் எனும் அந்தணனுக்கு சுமித்திரை என்ற பெயரில், மகள் ஒருத்தி இருக்கிறாள். அவளுக்குத் திருமணமே நடக்கவில்லை. ஆனால், அவள் இப்போது கருவுற்று இருக்கிறாள். முறை தவறிய அவளை நீங்கள்தான், முறைசெய்து விசாரித்துத் தண்டனை அளிக்க வேண்டும்” எனப் புகார் படித்தது.

மன்னரும் உடனே சுலோசனனை அழைத்து, ‘‘அந்தணா! உன் மகள் கருவுற்று இருக்கிறாளாம்; ஆனால், அவளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையென்று ஊரார் சொல்கிறார்கள். புகார் வந்திருக்கிறது. முறைதவறிய அவள் இந்நாட்டில் இருக்கக்கூடாது. உடனே, அவளை இந்நாட்டைவிட்டு வெளியேற்றி விடு! இது அரசகட்டளை” என உத்தரவு இட்டார்.

சுலோசனனுக்கு வருத்தம் தாங்கவில்லை; ”ஊரார் வார்த்கைளைக் கேட்டு, மன்னர் கட்டளை இடுகிறார். என்ன செய்வது? ப்ச்...” என்றபடியே வீடு திரும்பிய அவர், சுமித்திரையை ஊரை விட்டு வெளியேற்றிவிட்டார்.ஆதரவு இல்லாமல் வெளியேறிய சுமித்திரை, மெள்ள மெள்ள நடந்தாள். மன்னரால் விரட்டப்பட்ட அவளுக்கு, மண்ணைப் பதப்படுத்துபவர்கள் ஆதரவு கொடுத்தார்கள்; நிறை மாதமாக இருந்த அவளுக்குத் தயவு காட்டியவர்கள்- குயவர்கள்.

மகாவிஷ்ணுவையும் தாங்கும் ஆதிசேடனின், மனைவி மண் வேலை செய்பவர்களின் குடிசையில் நுழைந்து தங்கினாள். அன்பு மயமான அம்மனிதர்களின் அரவணைப்பும், உபசரிப்பும் சுமித்திரையை மகிழ்வித்தன.‘‘இந்த மகிழ்ச்சியை எல்லாம், நீ மட்டும் அனுபவித்தால் போதுமா? நானும்அதில் பங்கு கொள்ள வேண்டாமா?” என்பதைப்போல, சுமித்திரையின் வயிற்றில் இருந்த குழந்தையும் வெளிப்பட்டது; சுமித்

திரைக்கு சுகப்பிரசவம் ஆனது.

குயவர்கள் மகிழ்ச்சியில் குதித்தார்கள்; ”நம்ம வீடு தேடி வந்த மகராசிக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கு!” என்று கும்மாளமிட்டார்கள்;

குடிசைகளில் எல்லாம் குதூகலம் தவழ்ந்தது. உலகையே தாங்குபவனின் (ஆதிசேடனின்) குழந்தையைக் குயவர்கள் தங்கள் கைகளில் தாங்கினார்கள்; அக்குழந்தைக்கு ‘சாலி வாகனன்’ எனப் பெயரிட்டார்கள்.

தன் பெயரால் ஒரு சகாப்தத்தையே உருவாக்கப்போகிற குழந்தை அது என்பது, அப்போது அங்கு யாருக்குமே தெரியவில்லை. பெற்றவளான சுமித்திரைக்கே தெரியாது எனும்போது, மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது?சாலிவாகனனுக்கு ஐந்து வயதானது. அங்குள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போதே, அதிகாரமும் கட்டளையும் கொடிகட்டிப் பறந்தன.

‘‘நான் தான் ராஜா! நீ மந்திரி; நீ சேவகன்; நீதான் படைத் தளபதி! ம்...ராஜாங்கம் நடக்கட்டும்!”என்றுதான் சாலிவாகனன் விளையாடிக் கொண்டிருந்தான். சாலிவாகனனுக்கும் அவனது அன்னைக்கும் ஆதரவு கொடுத்து வளர்த்துவந்த குயவர், சாலிவாகனனின் விளையாட்டையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்கவில்லை; ”என்ன பிள்ளை இது! பிறந்தது நம் குயவர் குடிசையில்... பானை-சட்டி ஆகியவற்றை வைத்து விளையாடாமல், இப்படி ராஜாவைப்போல் விளையாடி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறானே, இந்த சாலிவாகனன்!  

‘‘இவன் எப்போது ராஜா-மந்திரியை எல்லாம் பார்த்தான்? ஒரு ராஜசபையையே நடத்திக் கொண்டிருக்கின்றானே! என்ன ஆச்சரியம்!” என்று வாய்விட்டுச் சொன்னார். அதேநேரத்தில் அந்தக்குயவர், தன் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் வேறொரு விதத்தில் வெளிப்படுத்தினார்; மண்ணாலேயே அரசர், மந்திரி, தளபதி, சேவகர், படைகள் என அனைத்தையும் (பொம்மைகளாகச்) செய்து, சாலிவாகனனுக்கு விளையாடக் கொடுத்தார். அதன்பிறகு சாலிவாகனனின் அரச சபை விளையாட்டு, இன்னும் சுவாரசியமாக நடந்தது.

ஒருநாள்... சாலிவாகனன் தன் வழக்கப்படி, ராஜ்ய பரிபாலன விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கையில், வேதியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்; சாலிவாகனனின் விளையாட்டைப் பார்த்தார். “ஆகா! சிறு குழந்தை; என்ன அழகாக அரச பரிபாலனத்தை, பொம்மை விளையாட்டாகச் செய்து கொண்டிருக்கிறது! ராஜசபையென்றால், தினந்தோறும் பஞ்சாங்கம் படிப்பார்களே! இந்தப் பொம்மை ராஜசபையில், இன்று நாம் பஞ்சாங்கம் படித்து விடுவோம்” என்று தீர்மானித்து, சாலிவாகனனின் விளையாட்டில் நுழைந்து பஞ்சாங்கம் படித்தார், அந்த அந்தணர்.

சாலிவாகனன் மனம் மகிழ்ந்தான்; தன்னருகில் இருந்தவனை நோக்கி, “மந்திரி! நம் ராஜசபையில் பஞ்சாங்கம் படித்த இந்த அந்தணருக்கு, ஒரு குடம் கொடுங்கள்!” என உத்ரவிட்டான். அப்படியே கொடுக்கப்பட்டது. குடத்தை வாங்கிக்கொண்டு அந்தணர் வீடு திரும்பினார்.

மறுநாள், பொழுது விடிந்ததும் அந்தணர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். காரணம்... நேற்று அவர் பெற்ற மண்குடம், இன்று தங்கக் குடமாக மாறியிருந்ததுதான். அந்தணருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சாலிவாகனன் நடத்தும் பொம்மை அரசாங்கத்திற்குப்போய் அங்கு

பஞ்சாங்கம் படித்தது, மண்குடம் பெற்றது, அது தங்கக்கு டமாக மாறியது என அனைத்தையும் அந்த அந்நணர் மக்களிடையே ஒலிபரப்பி

விட்டார். சாலிவாகனனைப் பார்க்காதவர் இதயங்களில் கூட இடம்பிடித்து, சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான், சாலிவாகனன்.

அவனையும் அவன் தாயையும் ஆதரித்து வளர்த்து வந்த குயவர், தன் பங்கிற்கு ஒரு சிம்மாசனம் செய்து கொடுத்தார். தங்கத்தால் அல்ல; தன்னிடம் இருந்த மண்ணை வைத்தே, சிம்மாசனம் செய்து கொடுத்தார். அத்துடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை எனும் நான்கு விதமான படைகளையும் மண் பொம்மைகளாகவே செய்து அளித்தார்.

சிம்மாசனத்தைப் போட்டு, அதன்மேல் உட்கார்ந்து, தர்பார் நடத்துவான் சாலிவாகனன். அவன் கட்டளைக்குக் காத்திருப்பதைப் போல, (மண்ணால் செய்யப்பட்ட) நால்வகைப் படைகளும் எதிரே காத்திருக்கும்.  சாலிவாகனனைப் பற்றிய தகவல்கள் எல்லாம், விக்கிரமாதித்தனுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவருக்கு சாலிவாகனனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசைநிறைவேறத்தான் போகிறது. ஆனால், அது எப்படி நிறைவேறப்போகிறது என்பதை விக்கிரமாதித்தன் அறிந்திருந்தால், விக்கிரமாதித்தன் ஆசைப்பட்டிருக்கவே மாட்டார். என்ன செய்வது? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்தால், மனித இனத்திற்கு இப்போதுள்ள கொஞ்ச நிம்மதி கூட இல்லாமல் போய் விடுமே! இருந்தாலும் விக்கிரமாதித்தன் ஆசைப்பட்டு விட்டார். அதற்கான சந்தர்ப்பம் வியாபாரி ஒருவர் வடிவில் வந்தது. எப்படி?

காலம் போய்க் கொண்டிருந்தது. புரந்தரபுரத்தில் இருந்த தனஞ்சயன் எனும் வியாபாரி, படுத்த படுக்கையாக இருந்தார். கடைசி காலம் நெருங்குவது, அவருக்குத் தெரிந்தது; தன் பிள்ளைகள் நால்வரையும் அழைத்தார். பிள்ளைகள் வந்து, தந்தை படுத்திருந்த கட்டிலைச் சுற்றி நின்றார்கள். அவர்களிடம்,‘‘பிள்ளைகளா! இந்தக் கட்டில் கால்கள் நான்கிற்கும் கீழே வைத்திருக்கும் பொருட்களை, நீங்கள் நால்வரும் பங்கிட்டுக்கொண்டு சுகமாய் வாழுங்கள்!” என்று சொல்லிவிட்டுத் தந்தை இறந்தார்.

பிள்ளைகள் நால்வரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளையெல்லாம் செய்தார்கள். அதன் பிறகு, தந்தை சொன்னபடியே கட்டில் கால்களின் கீழே தோண்டிப் பார்த்தார்கள். ஒன்றில் மண், ஒன்றில் உமி, ஒன்றில் சிறிய அளவிலான தங்கம், ஒன்றில் சாணம் என இருந்தன. நால்வரும் திகைத்தார்கள்; ”இவை எப்படிப் பொருட்களாகும்? இவற்றை எப்படிப் பங்கு போடுவது? என்று மனம் மயங்கினார்கள். அவற்றையெல்லாம் தனித்தனியாகப் பைகளில் போட்டு, எடுத்துக்கொண்டுபோய், ஊரிலிருந்த அறிவாளிகளிடம் காட்டி, தந்தை சொன்னதையும் சொல்லி விளக்கம் கேட்டார்கள்.

ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அனைவரும் சொல்லி வைத்தாற்போல், “அரசரிடம் போய்க் காட்டிக் கேளுங்கள்! அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்” என்றார்கள்.நான்கு பிள்ளைகளும் நாடாளும் அரசரான விக்கிரமாதித்தனிடம்போய், நடந்ததையெல்லாம் சொல்லி பைகளில் இருந்த பொருட்களையும் காட்டினார்கள்.

விக்கிரமாதித்தன் தன் மந்திரிகளோடு சேர்ந்து, அப்பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். ஒன்றும் புரியவில்லை.“விக்கிரமாதித்த மகாராஜாவாலேயே முடியவில்லை எனும்போது, என்ன செய்வது?” என்று மனம் வருந்திய பிள்ளைகள் நால்வரும் தாங்கள் கொணர்ந்த பொருட்களோடு திரும்பினார்கள்.

அவர்கள்வரும் வழியில், சாலிவாகனன் இருந்த இடத்தின் வழியாகப் போகும்படி நேரிட்டது. குழப்பம் நிறைந்த முகங்கள், கவலையை வெளிப்படுத்தும் கண்கள் - என நால்வரும் வந்து கொண்டிருந்ததை, சாலிவாகனன் பார்த்தான்; நால்வரையும் அழைத்து, அவர்கள் கவலைக்கான காரணத்தைக் கேட்டான். நால்வரும் நடந்தவற்ஹை சொன்னார்கள்.

சாலிவாகனன் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, ‘‘இந்த சின்னஞ்சிறிய காரியத்திற்காகவா, இவ்...வளவு அலைச்சல் பட்டீர்கள்? நான்அதன் குறிப்பைக் கூறுகிறேன். பைகளையெல்லாம் எடுங்கள்!” என்றான். நான்கு பைகளும் சாலிவாகனன் முன்னால் வைக்கப்பட்டன. அப்பைகளில் இருந்த பொருட்களை, ஒரு சில விநாடிகள்தான் சாலிவாகனன் பார்த்தான்; உடனே தீர்ப்பைக் கூறிவிட்டான்.

“மண் பையிலிருப்பது, நிலங்களைக் குறிக்கும். ஒருவன் நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! உமி என்பது, தானியங்களைக் குறிக்கும்; ஒருவன் தானியங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! தங்கம் இருக்கும் பை, ஆபரணங்களைக் குறிக்கும்; ஆகவே, ஒருவன் ஆபரணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! நான்காவதான சாணம் இருக்கும் பை, ஆடு-மாடு முதலான கால்நடைகளைக் குறிக்கும்; அதை அனுசரித்து ஒருவன் கால்நடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்! ‘‘உங்கள் தகப்பனார் சூட்சுமமாகப் பங்கீடு செய்திருக்கிறார். அதன்படியே பங்கு போட்டுக்கொண்டு நலமாக வாழுங்கள்!” என்றான், சாலிவாகனன்.

வியாபாரியின் பிள்ளைகள் நால்வரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; ”ஆகா! ஆகா! விக்கிரமாதித்த மன்னரால் கூடச் சொல்ல முடியாததை, சாலிவாகனன் சொல்லி விட்டான். என்ன புத்திகூர்மை! என்ன தீர்ப்பு! அழகு! அழகு!”எனச் சாலிவாகனனைப் புகழ்ந்தபடியே திரும்பினார்கள்.சாலிவாகனனின் புகழ் மேலும் பரவியது. விக்கிரமாதித்தனுக்கும் எட்டியது; மனம் குமைந்தார் மன்னர் விக்கிரமாதித்தன். ”நம் புகழுக்குக் களங்கம் வந்து விட்டதே! சிறுவன் ஒருவனால், நம் சிறப்பு சிதைந்து விட்டது. ஊஹும்!

சாலிவாகனனை விட்டு வைக்கக் கூடாது; பரலோகம் அனுப்பி விட வேண்டும். படைகள் தயாராகட்டும். போர்! போர்! ”என்று முழங்கினார்.

என்ன செய்வது? வீட்டு சுவரில் முளைக்கும் சிறுசெடி கவனிக்கப்படாமல், அது வளர்ந்து வீட்டையே அழித்து விடுகிறதல்லவா? அதுபோல, எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், பொறாமை என்பதை முளைக்கும்போதே கவனித்து நீக்காவிட்டால், அது அடியோடு அழித்துவிடும். விக்கிரமாதித்தன் கதையும் அப்படித்தான் ஆனது. அவர் சாலிவாகனனை அழிக்கப் படைகளுடன் புறப்பட்டார்.

விக்கிரமாதித்தன் எண்ணமும், படைகளுடன் அவர் போருக்கு வருவதையும் சாலிவாகனன் அறிந்தான். அவனுக்கும் அவன் அன்னைக்கும் ஆதரவு தந்து வளர்த்து வந்த குயவர் தலைவர் உட்பட, அனைவரும் பயந்தார்கள்; “என்ன ஆகுமோ? விக்கிரமாதித்த மகாராஜா, படைகளுடன் வருகிறாராம்!” என்று நடுங்கினார்கள்.

ஆனால்... அதற்கெல்லாம் காரண கர்த்தாவாக இருந்த சாலிவாகனன், அணு அளவுகூட அசையவில்லை. அண்டத்தையே தாங்கும் ஆதிசேஷன் மகனான அவன் பயப்படுவானா என்ன? அவன் அங்கிருந்த அனைவருக்கும் ஆறுதல் சொன்னான்; “பயப்படாதீர்கள்! என்னால் விளைந்த இதை நானே நீக்குவேன்” என்றான்.

அவ்வாறு சொன்ன சாலிவாகனன், உடனடியாக அதற்கு உண்டான நடவடிக்கைகளிலும் இறங்கினான்; தன்னிடம் இருந்த (பொம்மைகளால் ஆன) நால்வகைப் படைகளுக்கும் உயிரூட்டி, தானே தலைமைதாங்கிப் போர்க்களம் புகுந்தான்.  கடும்போர் மூண்டது. ஆதிசேஷன் மகனான சாலிவாகனனிடம் தோற்றுப்போய், அரசரான விக்கிரமாதித்தன் ஓடினார். சாலிவாகனன் வெற்றி வீரனாகத் திரும்பினான்.

அது மட்டுமல்ல! விக்கிரமாதித்தனிடம் இருந்து, தான் கைப்பற்றிய பகுதிக்கு (நர்மதையின் இந்தப்பக்கம்) அரசனாகவும் ஆனான்.

கொஞ்சகாலம் கழித்து...‘‘பகை, நெருப்பு, கடன் எனும் இம்மூன்றும் எவ்வளவுதான் சிறியதாக இருந்தாலும், அவை வளர்ந்து நம்மை அழித்து விடும்.

ஆகவே விக்கிரமாதித்தன் பகையை விரைவில் முடிக்க வேண்டும்” என்று தீர்மானித்த சாலிவாகனன், விக்கிரமாதித்தனுடன் போரிட்டு அவரைக் கொன்றான். நர்மதைக்கு அந்தப் பக்கமாக உள்ள பகுதியில் ‘விக்கிரம சகாப்தம்’ என்றும்; நர்மதைக்கு இந்தப் பக்கமாக உள்ள பகுதியில் ‘சாலிவாகன சகாப்தம்’ எனவும் வழங்கலாயிற்று.மைசூர் மன்னர் பரம்பரையினர், சாலிவாகன பரம்பரையில் வந்தவர்கள்.  பஞ்சாங்கங்களில் நாம் பார்க்கும் ‘சாலிவாகன சகாப்தம்’ என்பதை உருவாக்கியவரின் வரலாறு இது.

அஸ்வதி

Related Stories: