சென்னை: கராத்தே ஹுசைனி என்கிற ஷிஹான் ஹுசைனி (60), ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக ஹுசைனி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும், மற்றவர்கள் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷிஹான் ஹுசைனி, சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.மதுரையை சேர்ந்த ஷிஹான் ஹுசைனி, கே.பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அறிமுகமானார்.
விஜய்யின் ‘பத்ரி’ படத்தில் பாக்ஸிங் கோச் ஆக நடித்த பிறகு பிரபலமானார். விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். சினிமாவை தாண்டி வில்வித்தை, கராத்தே, சமையல் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கினார்.
ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. தனக்கு நிதியுதவி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்டார். கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் மரணம் அடைந்தார். மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக அவர் உடல்தானம் செய்துள்ளார். ஆந்திரா துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், ஹுசைனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.