மீனம்

திருவானைக்காவல்

பன்னிரெண்டு ராசிகளிலேயே கடைசியாக வருவது மீன ராசியாகும். இருப்பதிலேயே பள்ளமான ராசி மீனராசியாகும். அதனாலேயே பல விஷயங்களை ஆழ்மனதில் பதுக்கி வைத்திருப்பீர்கள். பள்ளத்தை தேடி வெள்ளம் பாய்வதுபோல விஷயங்களைத்தேடி உங்கள் மனம் ஓடிக் கொண்டிருக்கும். மீன குரு இதமாக, பதமாக, பக்கம் பார்த்து பேசுவீர்கள். தனுசு திட்டமிடாது திடீர் முடிவுகள் எடுப்பார்கள். ஆனால், மீனமோ எல்லாமே திட்டமிட்டபடி நடத்துவார்கள். வெளி உலகத்திற்காக போலியாக வாழாத யதார்த்தவாதி நீங்கள். தான் அறிந்ததை எப்போதும் எளிமையாக எடுத்துரைக்கவே விரும்புவீர்கள். சமயோசித புத்தியால் மற்றவர்களை வசியப்படுத்தக் கூடிய வார்த்தை சாதூர்யம் உண்டு.     

வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயே உங்களின் ஒன்பதாம் அதிபதியாக வருகிறது. ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். அதனால், வாக்கினாலேயே நிறைய பேசியே சம்பாதிப்பீர்கள். உங்களின் மூணுக்குரிய கிரகமாக ரிஷபச் சுக்கிரன் வருகிறார். மேலும் இது முயற்சி ஸ்தானம் மற்றும் இளைய சகோதரியைப்பற்றி சொல்லும் இடமாகும். நீங்கள் ஆணாக இருப்பின் பெண் இளைய சகோதரியாக இருந்தால் இருவரின் வாழ்க்கையிலும் கூடுதலாக அதிர்ஷ்டக்காற்று வீசும்.

நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கும், தாயைப்பற்றியும் சொல்லும் இடத்திற்கு புதன் அதிபதியாக வருகிறார். தாயையும் தாரத்தையும் சரியான முறையில் அனுசரித்துச் செல்வீர்கள். நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கினால் நீங்கள் முதலில் வாகனத்தைத்தான் வாங்குவீர்கள். தொடர்ந்து சந்தோஷமாக இருந்தால் பயம் வரும். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்குமா. நமக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று நினைப்பீர்கள். பூர்வபுண்ய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்கு குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்படும்.

ஆறாம் இடமா நோய், கடன், சத்ரு ஸ்தானத்திற்கு அதிபதியாக சூரியன் வருகிறார். உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் எப்போதும் எதிர்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஏழாமிடமான வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் இடத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். அதனால் வாழ்க்கைத் துணைவர் புத்திக்கூர்மை நிறைந்தவராக இருப்பார். அவர் எத்தனை திறமையாளராக இருந்தாலும் முடிவெடுப்பது மட்டும் உங்கள் கைகளில்தான் இருக்கும்.

தந்தையாரை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறுவீர்கள். அப்பாவை பின்பற்றுபவராக இருந்தாலும், வித்தியாசப்பட வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டேயிருப்பீர்கள். உங்கள் ராசிநாதனே தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார். உங்களில் நிறையபேர் சுய தொழில்தான் செய்வீர்கள். நீதித்துறை, சி.ஏ., வங்கி அதிகாரி, பதிப்பகம், போன்ற துறைகள் உங்களுக்கு பெயர் வாங்கித் தரும்.

கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதி களையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றிற்கும் அடிப்படை நீர்தான். அப்படி நீர் தத்துவத்தை, பஞ்சபூதங்களில் நீருக்குரிய தலமே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும். இறங்கும். இத்தல அம்பாளும் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.

Related Stories: