படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா? பெண் இயக்குனர் பரபரப்பு புகார்

சென்னை: ‘நான்சி ராணி’ என்கிற மலையாள படத்தின் பெண் இயக்குனர் நீனா என்பவர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஆஹானா கிருஷ்ணா தனது படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். ‘நான்சி ராணி’ படம் துவங்கப்பட்டது, கடந்த 2020ம் வருடம். முதலில் இந்த படத்தை இயக்கியது மனு ஜேம்ஸ். 2023ல் அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட டைரக்சன் பொறுப்பை அவரது மனைவி நீனா ஏற்றார். ஆஹானா கிருஷ்ணாவால் நாங்கள் பல தொல்லைகளை சந்தித்தோம்.

இந்த படத்தை முடிக்க முடியாமல் சிரமப்பட்டோம் என்று நீனா பேட்டி கொடுத்திருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ஆஹானா கிருஷ்ணா, “நீனா, என்னிடம் மட்டுமல்ல, மற்ற சிலரிடமும் பொறுப்பில்லாமல் தான் நடந்து கொண்டார். வேண்டுமென்று என் மீது அவதூறுகளை சுமத்தினார். கிளைமாக்ஸ் காட்சியை நான் இல்லாமலேயே என்னைப் போன்ற வேறு ஒரு சாயல் கொண்ட பெண்ணை வைத்து படமாக்கி முடித்தார். இந்த தகவல் படக்குழுவில் பணியாற்றிய சிலரால் என் காதுக்கு வந்தது.

என்னை டப்பிங் பேச அழைக்காமல் வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்து பார்த்தார்கள். அது ஒத்துவரவில்லை என்றதும் என் தாய்க்கு போன் செய்து என்னை டப்பிங் பேச அழைத்தார்கள். அப்போது என் அம்மா படப்பிடிப்பு பிரச்னைகள் குறித்து பேச, அதற்கு அவர் உங்கள் மகள் படப்பிடிப்பில் போதை பொருள் பயன்படுத்தினார் என என் மீது தவறான புகார்களை கூறி, அவர்கள் மீதான பிரச்னையை திசை திருப்ப முயற்சித்தார். இதெல்லாம் முடிந்து இந்த படம் வெளியாகி நல்லபடியாக ஓடினால் மனு ஜேம்ஸின் ஆன்மா சந்தோஷப்படுத்தும் என்று மட்டும் தான் என்னால் கூற முடியும்” என்று கூறியுள்ளார் ஆஹானா கிருஷ்ணா.

Related Stories: