ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் ஓலைப்பாய் அச்சு கண்டுபிடிப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மற்றும் மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் நடந்து வருகிறது. இதுவரை 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப் பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற தொல்லியல் பொருட்களும் கிடைத்துள்ளன.இந்நிலையில் ‘சி’ சைட் என்றழைக்கப்படும் 1902ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில்தான் இங்கே காணப்படும். ஆனால் தற்போது கிடைத்த ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. இந்த தட்டை வடிவில் உள்ள பகுதியில் பனை ஓலைப்பாய் அச்சுகள் உள்ளது. இந்த அச்சுகள் பனை ஓலையால் ஆனதா, அல்லது கோரப்பாய் என அழைக்கப்படும் கோரைப்புல்லில் நெய்யப்பட்ட பாயின் அச்சுகளா என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவில் கூடுதல் தகவல்கள், வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலை பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பாய் போன்ற பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் முதலை படம், மான்கள் படம், கரும்பு, நெற்பயிர்கள் வரையப்பட்ட ஓடு 2004ம் ஆண்டு அகழாய்வின்போது கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் பழமையான நாகரித்தைச் சார்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் உற்சாகமடைந்து உள்ளனர்….

The post ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் ஓலைப்பாய் அச்சு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: