ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, பிரம்மானந்தம் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘கேம் சேஞ்ஜர்’ என்ற படத்துக்காக படமாக்கப்பட்ட ‘லைரானா’ என்ற பாடலை, திடீரென்று படக்குழுவினர் நீக்கினர். இன்ஃப்ராரெட் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டிருந்த பாடல், ‘லைரானா’. இப்பாடல் குறித்து ஷங்கர், இசை அமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் திரு, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்பட அனைவரும் பெருமையாக பேசினர்.
உலக அளவில் ஒரு பாடலுக்கு இதுபோன்ற கேமராவின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது, ‘கேம் சேஞ்ஜர்’ படத்தில் மட்டுமே என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்பாடல் நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அப்பாடலை சேர்ப்பதற்காக படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வந்தனர். அதன் விளைவாக, நேற்று இப்பாடல் காட்சி இணைக்கப்பட்டது.