1000 ஆண்டுகள் பழமையான பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்

நாகர்கோவிலிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பறக்கை. தென்னை மர தோப்புகள், பச்சைப்பட்டாடை வயல்வெளிகள், குளங்கள் மத்தியில் அமைந்துள்ள பறக்கையில் மகாவிஷ்ணு மதுசூதனராக ஆலயம் அமர்ந்து அருள்பாலிக்கிறார். கற்களால் தமிழ்நாடு கட்டிடக் கலையில் அமையப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் மூலவர் மதுசூதனர் 5 அடி உயரம் கொண்ட சிற்ப வேலைப்பாடுகளுடன், சங்கு, சக்கரங்கள் இருகரங்களில் ஏந்தி ஒரு கரம் அபயம் அளிக்க மற்றொரு கரம் தொடைமேல் சார்ந்திருக்க அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் முன்பக்க வாசலில் உள்ள கொல்லம் 685ம் ஆண்டில்(கி.பி 1509) வெட்டப்பட்ட கல்ெவட்டில் இறைவனுக்கு நெய் விளக்கு ஏற்ற செருப்பள்ளி ஹரிஸ்வாமி பட்டர் 400 பணம் கொடுத்துள்ள கொடை செய்தியை கூறுகிறது.

 

இக்கல்வெட்டை காணும் போது, 15ம் நூற்றாண்டிற்கு முன்பு அதாவது 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவிதாங்கூர் வரலாற்றை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக தோன்றுகிறது. கோயிலின் முன்பு தெப்பக்குளம் உள்ளது. குளத்தின் மேற்கு பக்கம் படிகள் அமைத்து ஓடுகளால் கூரை வேயப்பட்டுள்ளது. உயரமான கொடிமரம் சுவாமி சன்னதியின் முன்புஉள்ளது. வழக்கமாக கொடிமரங்கள் செம்புத்தகடுகளால் வேயப்பட்டிருக்கும். ஆனால் இங்கு கொடி மரம் தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. 1956ம் ஆண்டு இந்த தங்ககொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சூரியஒளி படும்போது, கண்ணை கொள்ளை கொள்ளும். சித்திரை 10ம் நாள் சூரியஒளி மூலவரின் கால்களில் படும்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. நாஞ்சில் நாட்டில் சித்திரை 10 முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அன்றுதான் பொடி விதைப்பு என்ற பெயரில் வயல்களில் விதை விதைக்கின்றனர். எனவே அந்த நாள் மூலவரின் காலில் சூரிய ஒளி படும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தமிழாசிரியர் அய்யப்பன்பிள்ளை கூறுகிறார்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 5ம் திருநாள் கருட வழிபாடும், 9ம் திருநாள் தேரோட்டமும், 10ம் திருநாள் அன்று காலை 5 கி.மீ தொலைவில் இருக்கும் கடற்கரை ஆறாட்டிற்கு சுவாமி எழுந்தருளுகிறார். அன்று இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் 6ம் திருவிழா நடைபெறும். அன்று அங்கு வரும் பக்தர்கள் 2 கி.மீ தொலைவில் உள்ள பறக்கையிலும் வந்து மதுசூதனரை வழிபட்டு செல்கின்றனர்.

ஊர் பெயர் மாற்றம்

தமிழாசிரியர் அய்யப்பன்பிள்ளை கூறுகையில், திருவிதாகூர் வரலாற்றில் பறக்கையை “கிழால்மங்கலம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெயர் மாறிய கதையை பார்ப்போம். இறைவனின் அருள் பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த சிற்பியொருவர் மரத்தினால் ஆன ஆழகிய கருடாழ்வார் சிலையை செய்தார். சிற்ப சாஸ்திரங்களை கசடற கற்ற சிற்பி சாஸ்திர முறை தவறாமல் சிலையை வடிவமைத்தார். முழுத்தன்மையும் அமையப் பெற்ற சிலை உயிர் பெற்று பறந்து தென்திசை வந்து புனிதநீராடி மதுசூதனரை தரிசனம் செய்து வலம் வந்து புறப்பட்டு சென்றது. இதனை கண்ட கோயில் திருப்பணி செய்யும் சிற்பி தனது கையில் இருந்த உளியை கருடாழ்வாரை நோக்கி எறிந்தாராம். வலது இறக்கையில் காயம்பட்ட கருடாழ்வார், “மதுசூதனா” என அலறியபடி கீழே விழுந்ததாம். அந்த கருடாழ்வார் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் இச்சிைலையின் வலது பக்கம் காயம் பட்டிருப்பதை காணலாம். கருடர் விழுந்த இடம் கருடமுக்கு எனப்படுகிறது. கருடர் கீழே விழுந்தபின்னர் கிழால்மங்கலம் பறவைக்கரசூர் என பெயர் மாற்றம் பெற்றது. அது மருவி பறக்கை என அழைக்கப்படுகிறது. கருடாழ்வாருக்கு மோதகம் நிவேதனமாக படைக்கப் படுகிறது.

Related Stories: