கர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்

விருத்தாசலம்- உளுந்தூர் பேட்டை சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 1. கி. மீ. தொலைவில் உள்ளது கர்னத்தம். இந்த கிராமத்தில் இன்று காலை (14. 6. 2019 )  விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயங்கள் அமைந்த கதை சிலிர்ப்பூட்டும்.

கர்னத்தம் மிக அழகான சின்னஞ்சிறு கிராமம். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கிராமம் இது என்பதை தெருக்களின் நேர்த்தியும், ஊரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கோயில்களும்  சொல்லும்.  கிராமத்திற்கு வெளியே காவல் தெய்வமாய் அய்யனாருக்கு ஒரு கோயில். இவரை ஊமை அய்யனார் என்று அழைக்கிறார்கள்.

 ஊரின் நுழை வாயிலில் கிருஷ்ணனின் புகழ் பாட ஒரு பஜனை மண்டபம் இருக்கிறது. கிராமத்தின் அனுமனுக்கு தனிக்கோயில். ஊருக்கு வடக்கே சிவன் கோயில். ஊரின் பொது மைதானத்தை ஒட்டிய மந்தைகரையில், விநாயகர், பாலசுப்ரமணியன், மாரியம்மன் ஆகிய மூவருக்கும் மூன்று கோயில்கள். விநாயகர் கோயிலுக்கு எதிரே விமானத்தோடு கூடிய நந்தி மண்டபம். ஊருக்கு மேற்கே பெரிய குளம். அதை ஒட்டி அரசமரத்தடி நாகர். அதைத் தாண்டி ஏரி.

ஏரிக்கு ஒதுக்குப் புறமாக ஒரு குளம். இதற்கு கற்குளம் என்று பெயர். அந்த குளக்கரையோரம் சிதிலமடைந்து கிடக்கும் இரண்டு மண்டபங்கள். இது தான் ஊரின் அமைப்பு. இந்த கிராமத்தின் செல்லக் குழந்தை பாலசுப்ரமணியர் தான். தனிக் கோயில் கொண்டிருக்கும் இவர் கோயில்  கொண்ட கதை ஆச்சர்யமானது.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கர்னத்தம் கிராம மக்கள் காலராவால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பலர் இறந்தும் போனார்கள். தெய்வ குற்றமா? இல்லை வேறு ஏதாவதா என்று தெரியாமல் தவித்தனர்.

நோயின் கொடுமை மக்களை அச்சப்படுத்த, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, கிராமத்திற்கு பின்னால் கற்குளத்தின் கரையில்,  மண்டபத்தில் வசிக்கும் சித்தரைச் சந்தித்து முறையிட்டனர்.  

சித்தருடன் இரண்டு சீடர்களும் இருந்தனர். மக்களின் குறையைக் கேட்ட சித்தர் கன்மூடி யோசித்தார். ஒரு பெரிய வேல் செய்யச் சொன்னார். அதற்கு பூஜைகள் செய்து ஒரு நல்ல நாளில் அதை எடுத்துக் கொண்டு ஊர் முழுக்க வலம் வந்து ஊரின் மந்தைக்கரையில் நட்டார்.

ஆச்சர்யப்படத் தக்க வகையில் உடனே கொள்ளை நோய் கட்டுக்குள் வந்தது.  மகிழ்ச்சியடைந்த  கிராம மக்கள் சித்தரின் ஆலோசனைப்படி அந்த வேலுக்கு எதிரே முருகனுக்கு ஒரு கோயில் கட்டினர். அதில் பழனி முருகனைப் போன்றே அழகியதாய் ஒரு விக்ரகம் செய்து பிரதிஷ்டை செய்தார்.  அந்த முருகனுக்கு பால சுப்ரமணியன் என பெயரும் சூட்டியவர், அந்த கோயிலுக்கு அருகே விநாயகருக்கும் மாரியம்மனுக்கும் கோயில் எழுப்பச் சொன்னார்.

நந்தவனத்தையும் உருவாக்கிய அவர் தினமும் இந்த முருகனை வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் விநாயகர் கோயிலுக்கு எதிரே தனது ஜீவ சமாதியையும் அமைத்து, அதிலேயே ஐக்கியமானார். சித்தர் ஜீவசமாதி அடைந்தவுடன் அவரது சீடர்கள் தீர்த்தயாத்திரையாக வட பாரதத்திற்கு சென்று விட்டார்கள் என்கிறார்கள். இது வழிவழியாக சொல்லும் கதை.

வாருங்கள் பாலசுப்ரமணியனின் எழில் முகதரிசனம் காணலாம். நாம் முதலில் விநாயகரை தரிசிக்கிறோம். மிக அழகிய விநாயகர் மிகச் சிறிய கருவறையில் இருக்கிறார். விளக்கு ஏற்ற கல் பீடம் அமைக்கப் பட்டுள்ளதிலிருந்து இதன் தொன்மையை உணரமுடிகிறது. அடுத்து நாம் தரிசிப்பது மாரியம்மனை. வேப்பமரத்தடியில் சுயம்புவாய் இருந்தவளை சித்தரே கண்டு கொண்டு கோயில் கட்டியுள்ளார். இவள் வரப்பிரசாதி. இத்தலத்தில் தான் வள்ளை தெய்வானை சமேத் சுப்ரமணியர், மாரியம்மன், விநாயகர் ஆகியோரின் உற்சவ திருமேனிகள் இருக்கின்றன. ஆரியமாலா சமேத காத்தவராயனின் மரத்தினாலான சிலையையும் காணலாம்.

அடுத்து நாம் காண்பது ஊரின் செல்லக் குழந்தையான பாலசுப்ரமணியனை. இவருக்கு அருகே காசி விஸ்வநாதர், இடும்பன் கடம்பனுக்கு தனிக் கோயில் இருக்கிறது. மூலவருக்கு நேர் எதிரே வேலும் மயிலும். மயிலின் கழுத்தருகே பாம்பு போன்றொரு அமைப்பு உள்ளது. இவர்களை வணங்கி கருவறையில் நிற்கும் கந்தனைக் காண்கிறோம்.

பழனி முருகனைப் போலவே நின்றத் திருக்கோலத்தில்  மேற்கு முகமாய் காட்சி தருகிறார்.  தாமரையைப் போன்ற மலர்ச்சியான, மிக அழகான முகம். பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளும் சினேகமான சிரிப்பு. அதனால் தான் இவரிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் ஊரார். தங்கள் வீட்டுப் பிள்ளையாய் கொஞ்சுகிறார்கள் என்பதைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது. கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக காட்சிதரும் இவர், ஆண்டிக் கோலம் பூண்டிருந்தாலும் இவரை வணங்குபவர்களை வசதியாக்கக் கூடியவர். ஞான வடிவமான இவரை வணங்கினால் கல்வியில் தேர்ச்சியடையலாம் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.

பால சுப்ரமணியனுக்கு நேரே சித்தர் நட்டுவைத்தவேல் இருக்கிறது. இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கிருத்திகைக்கு, சித்தர் வாழ்ந்த கற்குளம் மண்டபக் கரையில்  காவடிகளுக்கு  பூஜைகள் செய்யப்பட்டு  ஊருக்குள்  வலம் வருகிறது. சித்தரின் அருளும் சிவபாலனின் சக்தியும் நிரம்பி வழியும் இத்தல தரிசனம் வாழ்வில் வளத்தையும் மனதில் தெளிவையும் தரும் என்பது சத்தியம்.

- எஸ்.ஆர். செந்தில்குமார்

படங்கள்: இரா.ரெங்கப்பிள்ளை 

Related Stories: