சினிமாவில் முன்னணி இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் முயற்சித்து வருபவர், ‘முருகா’ அசோக். ஒருநாள் தனது கனவில் பழைய புத்தகமும், அதிலிருந்து பாம்பு வருவதையும் பார்த்து மிரள்கிறார். பாம்பு அவரை தூங்கவிடாமல் தொல்லை செய்கிறது. தனது கனவை, முக்காலமும் உணர்ந்த சாமியார் கே.எஸ்.ஜி.வெங்டேஷிடம் அசோக் சொல்கிறார். அவர் கனவில் பார்த்த புத்தகத்தைக் கொடுக்கும் சாமியார், அதிலுள்ள கதையைப் படமாக்க கட்டளையிடுகிறார். சாமியாரின் தீவிர பக்தரான இளவரசு, அசோக் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். புத்தகத்தில் சொன்னபடி, செல்வபுரி காந்தாரா மலையிலுள்ள ஆளில்லாத பாழடைந்த பங்களாவில் சில உதவியாளர்களுடன் தங்கும் அசோக், அங்கு அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதைக் கண்டுபிடிக்கிறார். பங்களாவிலுள்ள மாணிக்கத்தை யார் தொட்டாலும், எரிந்துவிடுவதைப் பார்த்து அதிரும் அசோக், இறுதியில் மாயபுத்தகத்திலுள்ள மர்மங்களைக் கண்டுபிடித்தாரா? சாமியார் சொன்னபடி படம் இயக்கினாரா என்பது மீதி கதை.
இயக்குனராக முயற்சிப்பது, பங்களாவில் தனக்கு ஏற்படும் தடைகளை தகர்ப்பது, அபர்னதியின் முன்ஜென்மத்தை அறிந்து துடிப்பது என்று, நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் அசோக். ‘கண்ணால் கண்ணால்’ என்ற பாடல் காட்சியில் அவரது நடனம் சிறப்பாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சியிலும் பொளந்து கட்டியிருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் ஸ்ரீகாந்த், சிறையில் பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கிறது. முன்ஜென்மத்தில் பெற்ற சாபத்தால் மோட்சம் அடையாமல் இருக்கும் செல்வபுரி மகாராணி அபர்னதி, எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். தவிர இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், ‘அருவி’ மதன், ராம ஜெயப்பிரகாஷ், தாசரதி, லோகேஷ் ஆதித்யா ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.
ஆறுமுகம் ஒளிப்பதிவு, காட்சி களுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. முதல் பாதியை பேய் படம் போல் நகர்த்திய இயக்குனர் ராம ஜெயப்பிரகாஷ், 2ம் பாதியை வரலாறு, முன்ஜென்மம், நாகதேவதை, மன்னர்களின் போர் என்று, கிராபிக்ஸ் உதவியுடன் நகர்த்தியுள்ளார். ஆனால், கிராபிக்ஸ் பெரிதாக கைகொடுக்கவில்லை. ரவி விஜயானந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் இன்னும் பயமுறுத்தி இருக்கலாம்.
The post மாய புத்தகம் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.