சிக்கல்களை களையும் சிக்கல் சிங்காரவேலன்

தேவர்களின் மிதமிஞ்சிய சுகங்கள் பரமேஸ்வரனின் வழிபாட்டை மறக்கச் செய்தது. தேவலோகம் தன் களையை மெல்ல இழந்தது. தேவர்களின் அகத்தில் ஒளி குன்றியதால் புறத்தில் மலர்ந்திருந்த வளங்கள் மறையத் தொடங்கியது. ஒரு வெறுமையான வரட்சி சூழ்ந்தது. சக்தியற்றநிலை எங்கும் நிலவுவதுபோல் பொலிவிழந்து காணப்பட்டது. கேட்டதை அளித்திடும் காமதேனுதான் அதற்காக முதலில் கவலைப்பட்டது. நாட்கள்பல கடந்தபோது தேவர்களின் பசி அதிகரித்தது. ஆனால், யாகத்தின் பலனாக தங்களுக்குக் கிடைக்கும் உணவை ஈர்க்கும் சக்தியற்றிருந்தனர். கடும்பஞ்சம் பெரும் இருளைப்போல தேவலோகத்தை கவ்வியது.

தேவலோகம் மெல்ல நடுங்கத் தொடங்கியது. தேவலோகப் பசுவான காமதேனு அதிர்ந்தது.
Advertising
Advertising

அது காமதேனுவே ஆயினும் அதற்கேற்ற உணவில்லையேல் தவிக்கத்தானே செய்யும். எத்தனை மாதங்கள் பொறுத்திருக்கும். ஆனால், காமதேனுவுக்குள் விவேக மலர்கள் மலரவில்லை. இது ஒரு தவக்காலம். ஈசனின் விளையாடலாக மாற்றிப் பார்த்து நீ என்ன செய்தாலும் ஏற்கிறேன் என்று கண்மூடி அமர்ந்திருக்க வேண்டும். பசி மதியை தின்றது. புத்தியை சுத்தமாக மறைத்தது. வாடிய வயிற்றோடு மகாதேவனை நினைத்திருந்தால் எச்சமயத்திலும் தன் நிலை பிறழாது வாழலாம். பசியையே அக்னியாக மாற்றி அதன் நடுவில் யாகத்தீ வளர்த்து கடும் தவமியற்றலாம். ஆனால், பஞ்சமும், பட்டினியின் தகிப்பும் காமதேனுவை இறுகச் செய்திருந்தன. புத்தியில் எப்படியாவது வாழ்ந்தாக வேண்டுமே என்ற விரைவும், அலையலும் அதனை பாடாய்படுத்தின.

கால்கள் எங்கே உணவு என்று அலைந்தது. கிடைத்ததை வைத்து உயிர் ஜீவிப்போம் என்ற முடிவுக்கு வந்தது. தானொரு தேவலோகப் பசு என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. தமக்குள் மறைந்திருக்கும் தெய்வீகச் சக்தியை உணராத ஒரு மாயையில் உழன்றது. சிவப்பிரசாதமாக மற்றோர் கொடுக்கும் உணவை சக்தியாக மாற்றிய காமதேனுவின் நிலை தலைகீழாகப்போனது.  இப்போது மாமிச பட்சிணிபோல் உணவுக்காக உமிழ்நீர் வழிந்தோடும் நிலைகண்டு ஈசன் வருத்தமுற்றார். எப்படியேனும் அதனை மாற்ற வேண்டுமென தீர்மானித்தார். கண்கள் மூடினார். எங்கிருந்தோ மல்லிகையின் மணம் அவர் நாசியை தொடர்ந்து வருடியபடி இருந்தது. மெல்ல அந்த திக்கு நோக்கி முக்கண்களையும் திருப்பினார்.

அந்தப் பிரதேசமே, ஒரு முழு நிலவொன்று சட்டென்று தரையில் அமர்ந்தது போன்றிருந்தது. சூரியனின் ஒளிச்சிதறலால் இன்னும் வெண்மைகூடி ஜொலித்தது. வெகு அருகே சென்று பார்க்க மல்லிகைச் செடிகள் காடாகப் பரவி வெண்பூக்கள் கோடிகோடியாகப் பூத்து அவ்விடத்தை குலுங்க வைத்திருந்தன. அந்த மணத்திற்கு வாசம் கூட்டும் விதமாக வசிஷ்டர் அந்த வனத்திலேயே தவம் புரிந்தார். குளுமை பன் மடங்கு கூடியது. வனத்தின் மலர்கள் அவர்தம் செம்பாதத்தை அர்ச்சித்தது. வேறொருபுறம் எதைச் சாப்பிடுவது என்று அறியாது ரத்தம் தெறித்து அழுகிய மாமிசமாகக்கிடந்த ஒரு பிராணியை இன்னதென்று தெரியாது காமதேனு நுகர்ந்தது. பசியில் அது சுகந்தமாக உடல் முழுதும் பரவ நாவால் மெல்ல அதை அள்ளி எடுக்க ஈசன் சட்டென்று நெருப்பாய் அவ்விடத்தில் தோன்றினார். வற்றியவயிறோடு மெலிந்திருந்த காமதேனுவைப் பார்த்தார். கருணை கோப வடிவில் தொடர்ந்தது.

புத்தியிழந்த காமதேனுவே வெறும் மாமிசம் தின்பதற்கா நீ அவதரித்திருக்கிறாய். உன் சுயம் மறந்து பேதையாக அலைகிறாயே புலியாக மாறு எனச் சாபமிட்டார். காமதேனுவும் பயந்தது. தன் உருமாற்றத்திற்கும் தன் மனதிற்கும் சம்மந்தமில்லாது இருப்பது கண்டு ஈசனின் கால் பற்றிக் கதறியது. ஈசன் கருணையாக நோக்கினார். பிடரியை மெல்ல நீவினார்.‘‘நீ யார் என்பதை அறிய மல்லிகை வனத்திற்குச் செல்’’ என்றார். காமதேனு கலங்கிய கண்களோடு, தளர்நடை நடந்து வெண்மை வாரியிறைத்த அந்தப் பெரும் பிரதேசத்தை பார்த்தது. மெல்லத் தரையிறங்கியபோது தலத்தின் சாந்நித்தியம் சாரலாக அருட்சக்தியைப் பொழிய மெல்ல தன் உரு மாறத்தொடங்கியது. அழகிய செம்பாதங்களால் அந்த மல்லிகை வனத்தை வலம் வந்தது. மல்லிகை நுகர்ந்து குதூகலித்தது. வசிஷ்டரையே சுற்றிச் சுற்றி வந்தது. அவர் பூசித்து அருளிய கனிகளை ஈசனின் அருட்பிரசாதமாக ஏற்றுக்கொண்டது.

கண்கள் மூடி தமக்குள் சிலிர்த்துக்கிடந்த சிவத்தை இடையறாது பூஜித்தது. காமதேனுவின் அகத்திலும், புறத்திலும் சிவகளை தாண்டவமாடியது. ஒரு கணத்த அமைதி அதிர்வலைகளாக அவ்வனத்தைச் சூழ்ந்தது. யாவினிலும் நீக்கமற நிறைந்த சிவம் எனும் பெருஞ்சக்தி காமதேனுவை மையம் கொண்டது. ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலர்களாக காமதேனுவுக்குள் மலரும்போது பசுவுக்கு சிவப்பித்து பிடித்தது. உள்ளுக்குள் வெண்மலர்கள் தொடர்ச்சியாக மலரத் தொடங்கிற்று. மாயையான இந்த உலகம் மறைந்து வெறும் சிவசக்தியின் சங்கமமாக இருப்பது பார்த்து கண்ணீர் தானாகப் பெருகியது. அந்த பிரம்மானந்த உன்மத்த நிலையில் அதன் மடி கனத்தது. அமுதப்பால் ஊறி நுரைத்துத் தளும்பியது.

ஆத்மசக்தி எனும் அமுதப்பால் எடுக்க எடுக்கக் குறையாது பிரவாக ஊற்றாகப் பொங்கியது. அந்த பேரின்ப அவஸ்தையை தாங்காது இங்குமங்கும் நடந்தது. தன்னையறியாது பால் வழிந்தது. அதுவே ஒரு பொய்கையாக மாறியது. வசிஷ்டர் காமதேனுவின் இந்த உயர்ந்த நிலைகண்டு ஆனந்தமானார். ஆத்மசக்தி இன்னும் வெண்மையாக திரண்டு வருவதைப் பார்த்தார். தேவலோகப் பசுவுக்குள் சுரந்த ஆத்மசக்தி எனும் அமுதப்பாலை நிலையான வெண்ணெயாக எப்போதும்

ஓரிடத்தில் நிலைக்க வைக்க எண்ணினார். ஈசனின் அந்தச் சக்தியை, வெண்ணெயுருவில் வளர்ந்த அந்த சிவத்தை ஒன்றாகத் திரட்டினார். வேத மந்திரங்களால் லிங்க உருவில் பிரதிஷ்டை செய்தார். பிரபஞ்சத்தையே ஆளும் பெருஞ்சக்தி ஆழமாக, அழுத்தமாக அவ்விடத்தில் வேரூன்றியது. வசிஷ்டர் இந்த ரசவாதத்தை தரணியெங்கும் தந்துவிட மெல்ல அந்த லிங்கத்தை கைகளால் பெயர்த்தெடுக்க, அந்த லிங்கம் அவ்விடத்திலேயே சிக்கிக் கொண்டது.

சிக்கென பிடித்தேன் எம்பெருமானே என்பதுபோல அவ்விடத்தை பற்றிக் கொண்டது. அந்தத் தலத்திலேயே அமர்ந்துவிட பெருங்கருணை கொண்டது. இவ்வாறு எடுக்க இயலாது சிக்கிக் கொண்டதால், லிங்கத்தை வேறொரு இடத்தில் எடுத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தலத்திற்கு சிக்கல் என்ற பெயர் வந்தது.

சகல ரிஷிகளும் இத்தலத்தில் நிலைபெற்றுள்ள ஈசனைக் காண வந்தனர். உமையன்னை சிவபெருமானோடு சேர்ந்தமர்ந்தார். அவளின் கூரிய அமுதவிழிகள் நானிலத்தையும் நோக்கியபடி இருந்தன. மல்லிகை வனநாதரான வெண்ணெய்பிரான் தனது அரும்பெரும்பிள்ளை கந்தனுக்காக காத்திருந்தார். உமையன்னையும் சக்தியை சேர்ந்திருந்தாள். இத்தலத்திலே வேறொரு புராணம் அழகாக வளர்ந்தது. அது சிங்காரவேலனாக சிலிர்த்துச் சிரித்தது. மக்களின் தீவினைகள் அந்தச் சிரிப்பில் சிதறி ஓடின. சிக்கலுக்குள் சிக்காத தனிப்பாவு இழையாக சிலிர்த்தெழுந்தான் கந்தக்குமரன்.

தேவர்களை இம்சிப்பதையே தனது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் கொண்ட சூரபத்மனை கண்டு யாவரும் அஞ்சிநடுங்கினர். மயில்மீதமர்ந்து மாமறை உணர்த்தும் ஞானக் கொழுந்தின் உச்சியில் அமர்ந்திருந்தார் முருகப்பெருமான். தேவர்கள் படும் இன்னலை அறுக்க வேறொரு நாடகம் அங்கு அரங்கேறியது. சூரபத்மனை நோக்கிச் சென்ற கந்தப்படை அவனை எச்சரித்தது. அந்த பாலகனுக்கு நான் பயப்படவேண்டுமா. விலகிச் செல்லுங்கள் என்றான். குமரப்படை, அது ஞானசக்தி. அதிகூர்மையானது. வெட்டி வீழ்த்தினால் இருகூறாவாய். இத்தோடு உன் அட்டூழியத்தை நிறுத்திக்கொள் என்றனர். மாயையை ஆடையாக அணிந்தவன் சூரபத்மன்.  ஜாலங்கள் பல செய்து போர் நிகழ்த்துவாம். எளிதில்  எதிர்ப்படையை வென்று விடும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.  

சூரபத்மன் முருகப்பெருமானோடு போர் செய்யத் துணிந்தான். மாபெரும் தேரேரி பிரபஞ்சத்தின் வாயிலை அடைந்தான். குமரன் கணைகள் தொடுக்க வாயில் தகர்ந்தது. அரக்கக்கூட்டத்தை கண்களால் பார்க்க பொசுங்கிச் சாம்பலானார். சூரபத்மன் ஆகாயத்தில் நிறைந்து போர் செய்தான். பறவையாக மாறினார். முருகன் வாளால் இறக்கையை வெட்டி வீழ்த்தினார். தொடர்ந்து மாய்ந்து மாய்ந்து பல நூறு விதங்களில் யுத்தங்கள் செய்தான், சூரபத்மன். அநாயசமாக அதைச் சிதறடித்தார் குமரப்பெருமான். சட்டென்று கருணை முகங்கொண்டு சூரபத்மனைப்பார்த்தார். யாருக்கும் கிடைக்காத விஸ்வரூபதரிசனம் காட்டினார். சூரபத்மன் ஒரு கணம் எல்லாவற்றிலும் ஞானவானாக, செம்பொற்சோதியாக நிறைந்திருந்த குமரக்கடவுளைப் பார்த்தான். திகைத்தான். கைகூப்பித் தொழுதான். குமரன் சட்டென்று பாலகனாக மயிற்மீதேறியவுடன் அவன் மீண்டும் அறியாமையால் சூழப்பட்டான். இவனை மாற்றுவது கடினமென்றரிந்தார் கந்தர்.

மல்லிகை வனத்தில் மலர்ந்திருந்த தன் தாயைக் காண புறப்பட்டார், பாலமுருகன். மல்லிகைவனத்தில் அருள் மணம் பரப்பி அமர்ந்திருந்த தன் தாயின் திருவடிகளைத் தொழுதார். ஓடோடி வந்த சிறுவனின் மீது முத்து முத்தாக வியர்வைத்துளிகள் பூத்ததைப் பார்த்தாள், பார்வதியன்னை.  மெல்ல அதை ஒற்றி எடுத்தாள். கருணைபொங்கும் விழிகளுடையவள் தன் அன்புப் பாலகனை கூர்ந்து நோக்கினாள். சிங்காரனின் முகம் ரத்னமாக ஜொலித்தது. அவளின் அருட்கண்களிலிருந்து பேரண்டமாளும் பெருஞ்சக்தி விழிவழியே அம்பாகப் பாய்ந்தது. அதன் கூர்மை யாவற்றையும் சிதறடிக்கும் வல்லமையை தனக்குள் கொண்டிருந்தது. அழகிய சிங்காரனின் கைகளில் அமர்ந்தது. ஒளிவீசும் வேலை விழிவிரியப் பார்த்தவன் பிரமித்தான். வேல்நெடுங்கண்ணித் தாயே என அவள் பாதத்தில் வீழ்ந்து துதித்தான். போர்க்களம் நோக்கி ஓடினான். வேலை அவன் பெருமார்பை நோக்கி வீசினான்.

அது சூரபத்மனின் மார்பைப் பிளந்தது. இருகூறாக்கியது. தாயளித்த ஞானவேல் சூரபத்மனை ஞானவானாக்கியது. சிங்காரவேலனாக கந்தக்கடவுள் அருட்கோலம் பூண்டார். சிங்காரவேலனின் கொடியாகவும், வாகனமாகவும் தாமிருக்க வரம் கோரினான், சூரபத்மன். அவர் சரியென்றார். சூரன் கொடியேறி படர்ந்தான். ஞானக்காற்று அவனை நான்குபுறமும் இதமாக தழுவியபடி இருந்தது. சிக்கலில் வேல்வாங்கியவன் இத்தலத்தில் தனிச்சந்நதிகொண்டு அழகு காட்டினான்.

இன்றும் இத்தலத்தில் பிரதான நாயகரான நவநீதேஸ்வரசுவாமி எனும் வெண்ணெய்ப்பிரானுக்கு இணையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார், சிங்காரவேலவர். அது தவிர வைகுந்தவாசன் கோலவாமனப் பெருமாள் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் சேவை சாதித்தருளுகிறார். மகாபலியை அழித்து அவன் அகங்காரத்தைச் சிதைக்கவேண்டி சிக்கல் நவநீதேஸ்வர ஸ்வாமியை நோக்கி தவமியற்றினார் இப்பெருமாள். அவனருளால் மூவடியால் இப்பேருலகம் அளந்தார். அவதாரமாகத் திகழ்ந்தார். ஆதலால், இத்தலத்திலேயே அவருடன் சேர்ந்து இவரும் அருட்கோலம் காட்டியருளுகிறார்.  

இன்னும் பல புராணப் பெருமை கொண்ட இக்கோயிலை மெல்ல வலம் வருவோமா. சிவனின் அக்னிக் கொழுந்து அகத்தில் சுடர்விட்டெறிய அத்தணலை கோயிலாக மாற்றிய கோச்செங்கணான் அமைத்த எழில் மாடக்கோயிலே சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம். கோயிலுக்கு மேற்கில் உள்ளதே காமதேனு பொழிந்த பாற்குளம் தீர்த்தம். இதை வடமொழியில் ஷீரபுஷ்கரணி என்கிறார்கள். இதுபோன்று கயாதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், அம்மா குளம், விருத்த காவேரி எனும்

ஓடம்போக்கியாறு என பலதீர்த்தங்கள் இத்தலத்திற்கு அமைந்திருப்பது இதன் விசேஷம். இத்தலத்தின் விருட்சம் மல்லிகை. ஞானசம்பந்தரால் பல பதிகங்கள் பெற்ற தலம். வண்டுபாடும் சோலைகளும், செந்தண் பூம்பொழிற் சிக்கல் என்கிறார் சம்மந்தப்பெருமான். ஏழுநிலை மாடக்கோபுரம் சிவாலயத்திற்கும், மூன்று நிலை மாடம் பெருமாள் ஆலயத்திற்குமாக திகழ்கிறது. கோபுரத்திற்குள்ளே நுழைய வசந்தமண்டபம் உள்ளது.

கார்த்திகை திருநாட்களில் சிங்காரவேலவர் இங்கு எழுந்தருளுவார். இங்குள்ள நிலைக்கண்ணாடி முன்பு அசைந்தாடும் காட்சி காண கண்கோடி வேண்டும். கந்தனின் திருவிளையாடல்களை பல வண்ண ஓவியங்களில் தீட்டியிருக்கிறார்கள். ராமாயணத்தின் பல்வேறு கட்டங்களை சுதைச்சிற்ப வடிவில் தீட்டியிருக்கிறார்கள். அடுத்து மூலவரான நவநீதேஸ்வரரின் சந்நதி நோக்கி நகரும்போது அழகிய கலைத்திறனுள்ள சிற்பங்களை தூண்களில் செதுக்கியிருக்கிறார்கள். சற்றே மேலே பார்க்க மாடகோயிலாக விளங்கும் படிகளேறி மூலவரை அடைகிறோம். படிகளுக்குப் பக்கத்தில் சுந்தரகணபதியின் சந்நதி உள்ளது. கட்டுமலையின் தேவகோட்டம் என்றழைக்கப்படும் படிகளைக் கடந்து சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நதி உள்ளது. இங்கு மரகதலிங்கமுள்ளதால் மரகதவிடங்கர் என்ற பெயரும் இதற்குண்டு.

சோமாஸ்கந்தருக்குப் பக்கத்தில்தான் நவநீதேஸ்வரர் எனும் வெண்ணெய்ப்பிரான் அருளாட்சி செய்கிறார். வெண்ணெய்க்கு வடமொழியில் நவநீதேஸ்வரர் என்றும் மாறாத ஆத்மசக்தி என்றும் இருபொருளுண்டு. வசிஷ்டர் ஞானக்கரங்களில் வளைந்தெழுந்தது. வெண்ணெய்யப்பரின் அருட்கிரணங்கள் நெருங்கியோரை தென்றலாக வருடிச் செல்லும். வாழ்வு முழுதும் வெண் ஒளியாக வெண்ணையப்பரின் அருளொளி தொடர்ந்து வரும். மூலவரின் சந்நதிக்கு அருகேயே சிக்கல் நாயகன் சிங்காரவேலவன் சிருங்காரமாக எழுந்தருளியுள்ளார். பேரழகும் ஞானப்பூர்த்தியும் கொண்ட திருமுகம். தாய் ஈந்தளித்த ஞானவேலை கையிலேந்தி எப்போதும் காப்பேன் கவலைப்படாதீர்கள் என்று சொல்லும் கருணை காண்போரை நெகிழ்த்தும். வள்ளியும், தெய்வானையும் அருகில் நின்றருள ராஜகம்பீரத் தோற்றம் காட்டும் சிங்காரனைக் காண மனம் உறுதி பெறும்.

சிக்கலான சம்சார வாழ்வினை களைந்து தன்னிலவாகத் திகழும் ஆத்மசொரூபத்தை காட்டியருளுவான் வேலவன். இன்பம், துன்பம் என கணத்திற்கு ஆயிரம் இழைகளைக் கொண்ட சிக்கலான வாழ்வுதனை ஞானவேல் காட்டி அறுப்பான் சிங்காரநாயகன். இன்றும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டியை முன்னிட்டு பத்து நாட்கள் விழா நடைபெறும். அதில் ஐந்தாம்நாள் தேர்த்திருவிழா நிகழும். தேர்விழா முடிந்து வேலவர் அம்மையிடமிருந்து வேல் வாங்கி மலைக்குச் சென்றபின் சிலமணிநேரம் வியர்வைத் துளிகள் காணப்படும். இதை யாவரும் கண்ணுறலாம். வெண்பட்டால் ஒற்றி ஒற்றி எடுக்க வியர்வை சுரந்து கொண்டே இருப்பது பார்க்க மயிர்க்கூச்செரியும். வியர்வை படரும் சில மணிநேரங்கள் அச்சந்நிதியை ஏதோவொரு பெருஞ்சக்தி அடைத்து ஆக்ரமிப்பதை அறியலாம்.  இடையறாத ஒரு பரபரப்பும், பேரதிர்வுகளும் எல்லோரையும் அசைத்துக்கொண்டிருப்பதை கண்கூடாக தரிசிக்கலாம். இப்பேற்பட்ட தன்னிகரற்ற சந்நதியில் வியர்த்தெழுந்து, வேல் அளித்த அம்பாளின் சந்நதியை தரிசிப்போம்.

அழகுப் பிள்ளைக்கு வேல் கொடுத்து வெற்றியைத் தந்தவளான வேல்நெடுங்கண்ணி கருணை பூத்தருளுகிறாள். வடமொழியில் சத்தியாயதாட்சி என்று பெயர். அபய வரதஹஸ்தம் காட்டி இனிய வாழ்வை வளரச் செய்கிறாள். விழிக்கே அருளுண்டு என்பதுபோல, இவளின் விழி நெடுங்காவியம் படைத்தது. வேல் போன்ற கூரிய விழிகளால் வினைகளைத் துடைத்தழிக்கிறாள். பிள்ளையின் அங்கத்தில் பூத்த வியர்வையை ஒற்றி எடுத்தவள் நம் வற்றிய வாழ்வில் குளிர்சாரல் பரவச் செய்வாள். வேல் போன்ற நெடுங்கண்ணினை உடையாள் ஜென்மாந்தரமாக நம்முடன் நெடுந்தூரம் வந்தருளுவாள் எனில் ஐயமில்லை. அமுதக்கூர் விழிகளின் ஆனந்தத்தில் நனைந்தெழுந்து கோயில் பிராகாரம் வலம் வருவோம்.

மாடக்கோயிலின் முழுப் பிரமாண்டத்தையும் பிராகார வலத்தின்போது காணலாம். கோயிலின் கோபுரம் முழுவதும் புராணக்காவியங்களை செதுக்கியிருக்கிறார்கள். முழுதும் கற்றலியாக அல்லாது பெரும்பான்மையான கற்றலியாகத் திகழ்கிறது, இக்கோயில். வலமிருந்து நகர்ந்து செல்கையில் காமதேனு ஈசனை வழிபடும் சிற்பமும், கைகுவித்து வணங்கும் ரிஷிகளின் முகத்தில் பொங்கும் ஆனந்தத்தையும் புடைப்புச்சிற்பத்தில் கொட்டியிருக்கிறார்கள். இதுவே தலவரலாறை விளக்கும் ஆதார பொக்கிஷம். கோயிலை வலமாக வரும்போதே சிறு வழியாக கோலவாமனப்பெருமாள் கோயிலுக்குச் செல்லலாம். தாயாரின் திருநாமம் கோமளவல்லித்தாயார். சேஷாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம் யாவரையும் அருகில் அழைக்கும். அருளை அவர்கள் மீது வாரியிறைக்கும். வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இருகோயிலையும் வலம் வந்து வணங்கியெழ ஒரு ஞான ஊற்று கொப்பளித்துப் பொங்குவதை சுகமாய் உணரலாம்.  

நாகப்பட்டினம்  திருவாரூர் பாதையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிக்கல் அமைந்துள்ளது.

படங்கள்: எஸ்.ஆறுமுகம்

கிருஷ்ணா

Related Stories: