கம்பர் வணங்கிய சரஸ்வதி தேவி

கேரளத்தில் ஒவ்வொரு பண்டிகையுமே ஒரு வித்தியாசமான அம்சத்தைக் கொண்டிருக்கும். அந்த வகையில் நவராத்திரி விழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. அம்மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில். கம்பர் வழிபட்ட சரஸ்வதியின் சிலை தமிழ்நாட்டிலிருந்து ராஜமரியாதையுடன் எடுத்து வரப்பட்டு பத்து நாட்கள் கழிந்த பின்னர் மீண்டும் தமிழ்நாட்டிற்கே கொண்டு செல்லப்படும். நவராத்திரி திருவிழாவிற்காக மட்டும் இந்த சரஸ்வதி தேவி அண்டை மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறாள்! திருவனந்தபுரம் மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட காலத்தில் நவராத்திரிவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்போதைய குமரி மாவட்டம் முன்பு கேரள மாநிலத்தின் வசம் இருந்தது. மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டபோது பத்மநாபபுரம்தான் தலைநகரமாக இருந்தது. இந்த பத்மநாபபுரம் குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ளது.

இங்குள்ள அரண்மனை தற்போது கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பத்மநாபபுரம் அரண்மனையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கும் என்றாலும் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் அரண்மனையே களைகட்டும். காரணம், இந்த அரண்மனைக்குள்ளேயே சரஸ்வதி தேவிக்கு தனிக் கோயில் இருந்ததுதான். முழுவதும் கற்களாலான இந்தக் கோயிலின் அருகில் கலைநயத்துடன் கூடிய கல் மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 66 அடி நீளம், 27 அடி அகலம் கொண்ட இந்த இடத்தில்தான் நவராத்திரி நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த மண்டபத்திற்கு பெயரே நவராத்திரி மண்டபம்தான். 1744ம் ஆண்டு அப்போதைய மன்னர் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னரால் இந்த மண்டபம் கட்டப்பட்டதாகும்.   

கவிச்சக்கரவர்த்தி கம்பர் மூன்றாம் குலோத்துங்க மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒரு சமயம் மன்னருக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கம்பர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அப்படி வெளியேறியபோது, தான் வழிபட்ட சரஸ்வதி சிலையையும் தம்முடன் எடுத்துச் சென்று விட்டார். பின்னர் மாறுவேடத்தில் நெல்லை மாவட்டம் வந்தார். வள்ளியூரை ஆண்ட மன்னரிடம் தமது புலமையைக் காட்டி அங்கு அரசவைக் கவிஞரானார். ஆனால், அவரது கவித்திறன், அவர் நடந்து கொண்டவிதம் ஆகியவை இவர் சாதாரண புலவர் இல்லை என்று மன்னருக்குத் தெரிவித்தன. அதை அவரிடம் எப்படிக் கேட்பது? இதை கம்பரும் குறிப்பால் அறிந்து கொண்டார். இனி இங்கிருப்பது சரியல்ல என்று கருதி மன்னரிடம் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார். அப்படி வெளியேறியபோது சோழநாட்டிலிருந்து தான் கொண்டு வந்த சரஸ்வதிதேவி சிலையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டார்.

திருவிதாங்கூர் மன்னருக்கும் வள்ளியூர் மன்னருக்கும் ஏற்கெனவே நட்பு உண்டு. ஒரு சமயம் தன் நாட்டிற்கு வருகை தந்த திருவாங்கூர் மன்னரிடம், வள்ளியூர் மன்னர் தமது அரண்மனையில், கம்பர் விட்டுச்சென்ற சரஸ்வதி தேவி சிலையைப் பற்றித் தெரிவித்தார். இதைக்கேட்டு மகிழ்ந்த திருவாங்கூர் மன்னர் அதை தமக்கு தரவேண்டும் என்றும், தனது அரண்மனையில் ஒரு கோயில் கட்டி அந்த சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட விரும்புவதாகவும் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டு வள்ளியூர் மன்னரும் அந்த சிலையை திருவாங்கூர் மன்னருக்குக் கொடுத்தார். அந்த சிலையைக் கொண்டுதான் பத்மநாபபுரம் அரண்மனையில் சரஸ்வதிதேவிக்கு மன்னர் தனி கோயிலைக் கட்டினார்.

அந்தக் கோயிலுக்கு தேவராக்கட்டு கோயில் என்று பெயர். அங்கு முதன் முதலில் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடினார், மன்னர்.  துவக்கத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே வழிபட்டு வந்த சரஸ்வதி தேவியை நாட்டு மக்கள் எந்தநேரமும் வழிபட வேண்டும் என்ற அடிப்படையில் அரண்மனையின் இன்னொரு பகுதியில் தனி ஆலயம் ஒன்று கட்டப்பட்டு அங்கு திருவிழா நடத்தப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவின் மறைவிற்குப் பின்னர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. தலைநகர் மாற்றப்பட்டாலும் நவராத்திரி விழா தடைபடக்கூடாது என்று கருதிய மன்னர், திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜப்புரம் என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை கட்டினார்.

அந்த மண்டபத்தில் பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி விக்கிரகத்தை எடுத்து வந்து அங்கு ஒன்பது நாட்கள் சிறப்பாக நவராத்திரிவிழா நடத்தப்பட ஏற்பாடு செய்தார். அந்த நடைமுறை இன்றும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டுவருவது பாராட்டுக்குரியது. 1956ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அந்த ஆண்டு நவராத்திரி விழாவின் போது சரஸ்வதி விக்ரஹத்தை திருவனந்தபுரம் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது இரு மாநில அரசுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட தேவஸம் போர்டைச் சேர்ந்த அதிகாரிகள்தான் சிலையை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; அதற்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இந்த ஒப்பந்தம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதிதேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை தேவி விக்ரகங்கள், மேளதாளம் முழங்க பத்மனாபபுரம்

அரண்மனையில் இருந்து பவனியாக புறப்பட்டுச் செல்லும்.

இதில் சரஸ்வதி விக்ரகம் யானை மீதும், முருகன் மற்றும் முன்னுதித்த நங்கைதேவி விக்ரகங்கள் பல்லக்கிலும் கொண்டு செல்லப்படும். கோயில் அதிகாரி ஒருவர் மன்னரின் வாளை ஏந்தியபடி முன்செல்ல யானை, பல்லக்கு தொடர்ந்து வரும். இந்த வாளை அதிகாரி கொண்டு செல்வதற்கும் அரண்மனை உப்பரிகையில் ஒரு வைபவம் நடக்கும். இதற்கு உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி என்று பெயர். கேரள தொல்பொருள் துறை அதிகாரி ஒருவர் அரண்மனையில் உள்ள மன்னரின் உடைவாளை எடுத்து தமிழக அதிகாரியிடம் ஒப்படைப்பார். வாளை பெற்றுக் கொண்ட அதிகாரி அதை ஏந்தியபடி முன்செல்ல அவருக்குப் பின்னால் யானை, பல்லக்குகள் பவனி தொடரும். கடந்த சில ஆண்டுகளாக கேரள போலீசார் வாத்திய இசை இசைத்தபடி பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

பத்மநாபபுரத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு குழித்துறை மகாதேவர் கோயிலை அடையும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவு தங்க வைக்கப்படும். மறு நாள் காலை குழித்துறையில் இருந்து மீண்டும் புறப்பட்டு இரவு நெய்யாற்றின்கரை ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் விக்ரகங்களை இறக்கி பூஜை நடத்தப்படும். அதற்கு மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு அன்று மாலை திருவனந்தபுரம் கரமனை சென்றடையும். பின்னர் சரஸ்வதி தேவியை திருவனந்தபுரம் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், குமாரசுவாமியை ஆரிய சாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை விக்ரகத்தை செந்திட்டை பகவதி கோயிலிலும் வைத்து 9 நாட்கள் நவராத்திரி பூஜைகள் நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் முடிந்த பிறகு அந்த விக்ரகங்கள் அனைத்தும் மீண்டும் தமிழகத்திற்கே கொண்டு செல்லப்படும்.

Related Stories: