நாடு விமர்சனம்

சாமானிய மக்களுக்கு டாக்டராவது வெறும் கனவாகிப்போன காலத்தில் மலைகிராமம் ஒன்றுக்கு ஒரு டாக்டரின் தேவையை நெற்றி பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கும் படம். கொல்லிமலையின் உச்சியில் இருக்கிறது தேன நாடு கிராமம். சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலரும் செத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கிராம மக்களே இடம் கொடுத்து அங்கு ஒரு அரசு ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. ஆனால், அங்கு எந்த டாக்டரும் பணியாற்ற வருவதில்லை. அப்படியே வந்தாலும் யாரையாவது பிடித்து மாறுதல் வாங்கிச் சென்று விடுகிறார்கள். ஊர் மக்கள் கலெக்டரிடம் இது குறித்து முறையிட, ‘உங்கள் ஊரில் யாரும் வேலை பார்க்க தயாராக இல்லை. நான் ஒரு டாக்டரை அனுப்புகிறேன். அவருக்கு உங்கள் ஊரு பிடிக்கிற மாதிரி செய்யுங்க.

அவர் அங்கேயே இருந்து விடுவார்’ என்ற யோசனையை சொல்கிறார். அந்த ஊருக்கு புதிய டாக்டராக வருகிறார் மகிமா நம்பியார். நாகரிக பெண்ணான அவரை அங்கேயே தங்க வைக்க ஊர் மக்கள் பல திட்டங்களை போட்டு செயல்படுத்துகிறார்கள். மகிமா அந்த ஊரிலேயே தங்கி விடுகிறாரா? அல்லது அவரும் மற்றவர்களை போல கிளம்பி விடுகிறாரா? என்பதுதான் படத்தின் கதை. ஒரு வரிக் கதைக்கு அழகான திரைக்கதை, உருக வைக்கும் வசனங்களால் உயிரூட்டி இருக்கிறார் இயக்குனர் சரவணன். டாக்டருக்கு என்ன தேவையோ அதை பார்த்து பார்த்து செய்யும் இளைஞன் கேரக்டரில் தர்ஷன் இயல்பாக நடித்திருக்கிறார்.

டாக்டருடன் காதல், கனவு, டூயட் என்று எதுவும் இல்லாமல் ஊருக்காக போராடும் இளைஞனாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். சத்தமாக வசனம் பேசி கடுப்பேற்றும் சிங்கம்புலி, இதில் ஊர் தலைவராக பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். டாக்டராக வரும் மகிமா ஆரம்பத்தில் கிராம மக்களிடம் சிடுசிடுவென முகம் காட்டி எரிந்து விழுவதும், பின்பு அவர்களை பிரிய முடியாமல் கண்ணீர் விட்டு அழுவதுமாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிராம மக்களே சேர்ந்து ஒரு பெண்ணை டாக்டருக்கு படிக்க வைக்க முயற்சிப்பதும் நீட் தேர்வில் அந்த பெண் தோற்றதும் தற்கொலை செய்து கொள்வதுமான திரைக்கதை, அனிதாவை நினைவுபடுத்துகிறது. டாக்டரை ஊரிலேயே தங்க வைக்க செய்யப்படும் ஏற்பாடுகள் யதார்த்தமானவை என்றாலும் இறந்த போன தர்ஷனின் அப்பா ஆர்.எஸ்.சிவாஜிக்கு பதில் அவரது தம்பியை கொண்டு வந்து நிறுத்துவது, டாக்டரை கவர மலை உச்சியில் டீக்கடை வைப்பது, ஊரில் உள்ள ஒரு இளைஞர் டாக்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர் இங்கேயே தங்கி விடுவார் என திட்டமிடுவது மாதிரியான விஷயங்களை இன்னும் நம்பும்படி சொல்லியிருக்கலாம்.

படத்தில் காமெடிக்கென்று தனி காட்சிகள் எதுவும் இல்லை, ஆனால் இயல்பாகவே பல இடங்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. ‘ரொம்ப காரமாக இருக்கிறது’ என்று கண்கலங்கியபடி மகிமா சாப்பிட, அதை கிராமத்து பெண், ‘டாக்டரம்மா ரொம்ப பசியா இருக்குன்னு அழுதுகிட்டே சாப்பிட்டாங்க’ன்னு ெசால்வது, ஒரு சாம்பிள். சத்யாவின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது. கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை மலைகிராம மக்களில் ஒருவராக்குகிறது. மருத்துவம் படிப்பதில் உள்ள சிக்கல்கள், மருத்துவர்களின் தேவை இரண்டையும் அழுத்தமாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறது நாடு.

The post நாடு விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: