சந்திரமுகி 2 – திரைவிமர்சனம்

லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சந்திரமுகி2‘. 2005ல் ரஜினிகாந்த், நயன்தரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம். டாக்டர். சரவணன்(ரஜினிகாந்த்) மற்றும் செந்தில் நாதனின் (பிரபு) குடும்பம் இணைந்து கங்காவின் உடலில் இருந்து ‘சந்திரமுகி‘ ஆத்மாவை விரட்டியடிக்க நிலமை சீரானது. அங்கே முடியும் கதை, இங்கே செந்தில் நாதன் நடந்த பிரச்னைக்குப் பின் முருகேசனிடம் (வடிவேலு) அரண்மனையை ஒப்படைத்துவிட்டு செல்வதாகவும், அந்த அரண்மனைக்கு தற்போதைய உரிமையாளர் முருகேசன் என்பதாகவும் கதை துவங்குகிறது.

அந்த அரண்மனையை ஒன்றரை மாதங்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கி குலதெய்வ கோவிலில் வழிபட வேண்டும் என வந்து சேர்கிறார்கள் ரங்கநாயகியின்(ராதிகா) குடும்பத்தார். இவர்களுடன் காதலித்து ஓடிப்போன ரங்கநாயகியின் மகளுடைய குழந்தைகளும் வழிபாட்டில் கலந்துகொண்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என அக்குழந்தைகளும், அவர்களுக்கு பாதுகவலனாக இருக்கும் பாண்டியனும்(ராகவா லாரன்ஸ்) வந்து சேர்கிறார். வழக்கம் போல தெற்கு பக்கம் யாரும் செல்லக் கூடாது என்னும் கட்டுப்பாட்டை மீறி வீட்டார் செல்கிறார்கள். பிறகென்ன அடக்கப்பட்ட சந்திரமுகி(கங்கனா ரணாவத்) ஆத்மா வெளியேறி ஆட்டம் காட்டுகிறது, முடிவு என்ன என்பது மீதிக் கதை. படத்தில் என்னவெல்லாம் சிறப்பான விஷயங்கள் எனப் பார்க்கலாம்.

முதலில் அரண்மனை மற்றும் போடப்பட்ட பழங்கால செட்கள் அருமை. அதே 17 வருடங்களுக்குப் பிறகான செட்டை மீண்டும் அமைத்த தோட்ட தரணிக்கு பாராட்டுகள். மேலும் பிளாஷ்பேக்கில் வரும் ஆடைகள், ஆபரணங்கள் கூட நம்மை ஈர்க்கின்றன. ஆங்காங்கே தென்படும் வடிவேலுவின் காமெடிகள் ஓரளவு ஆறுதல். படத்தின் மைனஸ் என்ன? பி.வாசு சந்திரமுகியில் என்ன செய்திருந்தாரோ அதை அப்படியே அதெ டெம்பிளேட்டில் வேறு நடிகர்களைப் பொருத்திப் பார்த்திருக்கிறார். பழைய கதையின் மற்ற நடிகர்களை விடுங்கள்,ஆனால் முருகேசனுக்கு அரண்மனையை சொந்தமாக்கும் அளவிற்கு யோசித்த இயக்குநர் முருகேசனின் மனைவி சொர்ணா (சுவர்ணா மேத்யூ) பாத்திரம் எங்கே என்பதற்கு பதில் வைக்கவில்லை.

மேலும் முந்தைய பேய்ப் படங்களில், ஆக்ஷன் படங்களில் பார்த்த அதே ராகவா லாரன்ஸ் இங்கும் தெரிவது சலிப்பு. குடும்பங்களும் கலர்ஃபுல்லான காஸ்ட்யூம்களில் நடனம் ஆடுவதும், வீட்டில் சுற்றுவதுமாகவே இருக்கிறார்கள். யார் யாருக்கு மகள், எப்படி உறவு என்னும் விளக்கம் இல்லை. பாடல்கள் அதைவிட ஆபாரமாக ‘சந்திரமுகி‘ படத்தின் அப்பட்டமாக அதே வெர்ஷனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தனையுமாக ஒன்றிணைந்து சலிப்பை உண்டாக்கிவிட்டன. வடிவேலுவாவது படத்தின் காமெடி பாகங்களுக்கு உதவுவார் எனப் பார்த்தால், மனிதர் ஏற்கனவே ‘மாமன்னன்‘ பாத்திரத்தில் நின்று விட்டதால், பல இடங்களில் சிரிப்பு வர மறுக்கிறது, அல்லது பழைய அதே ஸ்டைல் காமெடிகளால் சலிப்புண்டாக்குகிறது.

காதல் வருமிடம், பேய் வருமிடம், சண்டை காட்சிகள் வருமிடம் என எல்லாமே திணிக்கப்பட்டவைகளாக தேங்கி நிற்கின்றன. இதில் உண்மையான சந்திரமுகி இவர்தான் என அடித்துச் சொன்னாலும் கங்கனா ரணாவத்தை ஏற்றுகொள்ள மனம் மறுக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகையே என்றாலும் நடனம், மற்றும் நளினம் என வந்தால் தடுமாறும் பேர்வழி கங்கனா, அவருக்கு இந்தப் பாத்திரம் சற்று குருவி தலையில் வைத்த பனங்காய்தான். எந்த அளவிக்கு சந்திரமுகி முதல் பாகத்தை தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மொழி வெர்ஷன்களும் கொண்டாடினார்களோ , எப்படி மற்ற மொழியில் 2ம் பாகம் எடுபடவில்லையோ அதே நிலைதான் இங்கும்.

இசை ஆஸ்கர் புகழ் கீரவாணியின் கையால் சில இடங்களில் மின்னினாலும், ‘சுவாகதாஞ்சலி‘ பாடல் தவிர மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆர்.டி.ராஜசேகரின் விஷுவல் பல இடங்களில் பலம் சேர்த்திருக்கிறது. எடிட்டர் ஆண்டனி ஏன் சில வசனங்களை பாதியில் தெரியும்படி கட் கொடுத்தார் எனத் தெரியவில்லை. மொத்தத்தில் மூன்று நாட்கள் விடுமுறை, குழந்தைகள் தொல்லை தாங்க முடியாது ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம், அதற்குள் ஒரு பேய் இதைக் காட்டி என் குழந்தைகளைத் திருப்திப்படுத்திவிடுவேன் என நம்பிக்கை உள்ளோர் படத்தை தவறாமல் பார்க்கலாம்.

The post சந்திரமுகி 2 – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: