இந்நிலையில் திட்டமிட்டபடி, கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் ஜூன் 2ம் தேதியும் (இன்று), தனியார் பள்ளிகள் ஜூன் 5ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை காலத்தில் வெப்பம் நிலவுவதை பொறுத்து கோடை விடுமுறையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் தமிழ்நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி அரசு பள்ளிகள் ஜூன் 2ம் தேதி (இன்று) திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதனால் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், புத்தகம், பை, துணிகள் என பொருட்கள் வாங்க இருந்ததால் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 2 நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வர தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்டபடி ரயில்களில் வந்தனர். அதிலும் சிலர், தத்கல் மூலம் பயணச்சீட்டு பெற்று வந்தனர். தத்கல் டிக்கெட் கிடைக்காதவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் சென்னை வந்தனர். இதனால் தனியார் பஸ்களில் கட்டணம் அதிகளவில் இருந்தது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. நேற்றிரவும் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்தனர். மேலும் கார், பைக், அரசு, தனியார் பஸ்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதனால் பரனூர் சுங்கச்சாவடி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.
இந்த சுங்கச்சாவடிகளில் கூடுதலாக 2 கவுன்டர்கள் திறக்கப்பட்டு 8 வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன. வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு போக்குவரத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று காலையிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. குறிப்பாக கிளாம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட வாகன நெரிசல் காணப்பட்டது.
The post கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பியவர்களால் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்; மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.
