ஊட்டி :ஊட்டி அருகே பெம்பட்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுவது, மண் சரிவுகள் ஏற்படுவது மற்றும் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது.
இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் துரிதமாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நேற்று தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகி எம்.பி. ஆ.ராசா, அரசு தலைமை கொறாடா ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், இச்சாலையில் உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, ஊட்டி ஜெல் நினைவு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமினை பார்வையிட்டனர். அங்கு தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
மேலும், அனைத்து உதவிகளும் அரசிடம் இருந்து பெற்றுத்தரப்படும். மழை முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களிலேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது, நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லலிதா, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் கலெக்டர் கவுசிக், எஸ்பி நிஷா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், ஆர்டிஓ சதீஷ்குமார், ஊட்டி நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
The post ஊட்டி அருகே சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு; அமைச்சர், எம்.பி. ஆய்வு appeared first on Dinakaran.
