72 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1, 1ஏ தேர்வு அறிவிப்பாணை வெளியீடு: ஜூன்.15ம் தேதி முதல் நிலை தேர்வு

சென்னை: 72 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1,1ஏ தேர்வு அறிவிப்பாணை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏப்.30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் முதல் நிலை தேர்வு ஜூன்.15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு உரிய அறிவிப்புகள் வெளியிட்டு போட்டி தேர்வினை நடத்துகிறது. அரசு பணி கனவுடன் தமிழகத்தில் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கன அறிவிப்பினை எதிர்நோக்கி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்வர்களின் வசதிக்காக ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதாத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

துணை ஆட்சியர்(28), காவல் துணை கண்காணிப்பாளர்(7), வணிகவரி உதவி ஆணையர்(19), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(7), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி(3), தொழிலாளர் நல உதவி ஆணையர்(6) உள்ளிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வும், உதவி வன பாதுகாவலர் 2 பணியிடங்களுக்கான குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏப்.30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1ஏ தேர்வுக்கான 2 பணியிடங்களில் ஒன்று பட்டியலினத்திற்கும், ஒன்று பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 5ம் தேதி முதல் மே 7ம் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், இவை தவிர பணியிடங்களுக்கு ஏற்ப கூடுதல் தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளது.

முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு ஆகிய நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. வயது வரம்பு 2025ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்று குறைந்தபட்ச வயதான 21 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும் பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன்.15ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையில் தேர்ச்சி அடைந்தவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுயவர், இரண்டாம் நிலை தேர்வில் தமிழ்ல் முதலில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மற்ற தேர்வு தாள்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

The post 72 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1, 1ஏ தேர்வு அறிவிப்பாணை வெளியீடு: ஜூன்.15ம் தேதி முதல் நிலை தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: