சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு மற்றும் சர்வம் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் காமகோடி மற்றும் சர்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ப்ரத்யூஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: சர்வம் நிறுவனத்துடன் ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் துறை செயலாளர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயர் ஊதியம் வழங்கும் டி-டெக் பணி வழங்கப்படும்.
தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் தேவைப்படும். அதிலும் இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் இந்த ஏஐ மையத்தினை கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் தமிழில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பம் உருவாகப்பட உள்ளது. திராவிட மாடல் அரசு தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
உற்பத்தி மற்றும் சேவையில் முதன்மையாக தமிழகம் உள்ளது. இந்த செயற்கை தொழில்நுட்ப தரவு மையமானது மக்களின் தகவல் திருடப்படுவது தவிர்க்கப்படும். மேலும் தமிழகத்திற்கு என தனிப்பட்ட ஒரு தனி மையம் இயக்கப்படும். இதன் மூலம் பல்வேறு வகையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். ஜிபியு-களுக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதை உணர்த்து அதற்கான முன்னெடுப்பு பணிகளையும் மனதில் கொண்டுள்ளோம். அதற்கு நல்ல முடிவு மிக விரைவில் எடுக்கப்படும்.
அனைவரும் ஏஐ பயன்படுத்தி வருகிறோம். நம் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகிறது. எனவே இதன் மூலம் நம் வீட்டுக் குழந்தையை முதலில் வளர்க்க முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதாவது : விவசாயம், மருத்துவம் மற்றும் பல்வேறு துறையில் ஏஐ தொழில்நுட்பம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் டேட்டா சென்டர் கட்டப்படுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. ஒவ்வொரு துறையும், தனியார் நிறுவனமும் தங்களின் தரவுகளை ஒரே பகுதியில் இணைத்து கொள்ளும் வகையில் அமைக்கப்படும். திட்டங்களை அனைத்து மக்களையும், நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
