கர்நாடகாவில் மனைவி, குழந்தை உள்பட 4 பேர் குத்திக்கொலை: கேரளாவில் பதுங்கிய வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகள், மாமனார், மாமியார் ஆகியோரை குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான வாலிபரை கேரள மாநிலம் வயநாட்டில் போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர் கரியன் (70). இவரது மனைவி கவுரி (65). இந்த தம்பதியின் மகள் நாகி (34) என்பவருக்கும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லி பகுதியை சேர்ந்த கிரீஷ் (38) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு காவேரி (5) என்ற மகள் இருந்தார். கிரீஷும், நாகியும் கேரளாவில் கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். பல்வேறு பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரீஷ் தன்னுடைய குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்குள்ள தனது மாமனார் கரியனின் வீட்டிலேயே வசிக்க தொடங்கினார். இதன் பிறகும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர்களது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் அங்கு சென்று கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

இதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அந்த வீட்டுக்குள் கரியன், கவுரி, நாகி மற்றும் அவரது மகள் காவேரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குடகு போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குடகு மாவட்ட எஸ்பி ராமராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மாமனார், மாமியார், மனைவி, குழந்தை என 4 பேரையும் குத்திக் கொலை செய்துவிட்டு கிரீஷ் தப்பி சென்றது தெரியவந்தது. கொலைக்குப் பின் தலைமறைவான அவரை போலீசார் தேடிவந்தனர். கிரீஷ் கேரளாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்ததால் இது குறித்து குடகு போலீசார் கேரள போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

கேரள போலீசார் நடத்திய விசாரணையில் கிரீஷ் வயநாடு மாவட்டம் தலப்புழா என்ற பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த கிரீஷை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் குடகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

The post கர்நாடகாவில் மனைவி, குழந்தை உள்பட 4 பேர் குத்திக்கொலை: கேரளாவில் பதுங்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: