மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க மருமகளை திட்டம் தீட்டி கொன்றேன்: மாமியார் பரபரப்பு வாக்குமூலம்

 

கள்ளக்குறிச்சி: மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏதுவாக மருமகளை ஓராண்டாக திட்டம் தீட்டி கொலை செய்ததாக மாமியார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சப்பான் மகன் ராஜா. இவர் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நந்தினி(29) என்பவரை திருமணம் செய்து வளையாம்பட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 5 வருடங்களுக்கு முன்பு ராஜா இறந்து விட்டார். பின்னர் விரியூர் கிராமத்தில் பிசியோதெரபிஸ்ட் மையம் நடத்தி வரும் மரிய ெராசாரியோவுடன்(36) பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவரை, நந்தினி 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இத்தம்பதிக்கு அலெக்சியா கிறிஸ்தோபர் என்ற குழந்தை உள்ளது. 2வது திருமணம் செய்ததால் நந்தினிக்கும், அவரது மாமியார் கிறிஸ்தோப் மேரிக்கும்(55) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினியை அவர் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவருக்கு உறுதுணையாக இருந்த எமிலி(52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், கிறிஸ்தோப் மேரி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் எங்களது குடும்பத்துக்கு என்று ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது. வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தினியை 2 குழந்தைகளுடன் தனது மகன் திருமணம் செய்து கொண்ட பிறகு என்னால் எந்த சுப நிகழ்ச்சிக்கு கூட செல்ல முடியவில்லை.

எங்கு சென்றாலும் உன் மகன் என்ன 2 குழந்தைகளுடன் இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராமே என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டு வந்தனர். இதனால் உறவினர் வீட்டுக்கு கூட செல்ல முடியாமல் அவமானத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். இதுகுறித்து என் மகனிடம் அடிக்கடி பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் எனது பெயரில் அதே கிராமத்தில் எங்கள் பூர்வீக சொத்து 10 சென்ட் இடம் இருந்தது. அதனை நான் விற்று விட்டேன். விற்ற பணத்தில் நந்தினி தனது 3 பிள்ளைகளுக்கும் பங்கு வேண்டும் என கேட்டார். அதற்கு நான், என் மகனுக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு மட்டும் தான் பங்கு தர முடியும் என கூறினேன்.

மற்ற 2 பிள்ளைகளுக்கு தர மாட்டேன் என கண்டிப்புடன் கூறியும் நந்தினி கேட்கவில்லை. இதனால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே மணி அழகாபுரம் அருகே உள்ள மணி ஆற்றங்கரைக்கு மருமகள் நந்தினியை அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிட்டேன். அப்போது நந்தினியின் செல்போனில் இருந்து என் மகன் செல்போன் எண்ணுக்கு தான் இருக்கும் இடத்தை லொகேஷன் அனுப்பினார். அதனால் எனது மருமகளை கொலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதனை மனதில் கொண்டு கடந்த ஒரு வருடமாக திட்டம் தீட்டி கடந்த 4 மாதங்களாக அவரிடம் நன்கு பழகினேன். மேலும், தோழி எமிலி ஆலோசனையின் பேரில் மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று கடந்த 29ம் தேதி அதிகாலை நந்தினியை மணி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றேன்.

அங்கே பூஜை செய்யும் போது, கண்ணை மூடிக்கொள் என்று கூறி, நந்தினியிடம் எலுமிச்சை பழத்தை கொடுத்தேன். அங்கிருந்த தோழி எமிலி பூஜை செய்வது போல் நடித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் நந்தினி கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்தோம் என்று கூறியுள்ளார்.

Related Stories: