செய்யாறு, மார்ச் 28:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த நிதி ஆண்டில் (2024-25) மட்டும் 35 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள 919 பள்ளி மற்றும் 855 அங்கன்வாடி மையங்களை தினசரி பார்வையிடப்பட்டு அதில் அங்கன்வாடி மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு மற்றும் இதர நோய்கள் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த நிதியாண்டில், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் மட்டும் 35 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக இருதய நோய்க்கு 21 குழந்தைகளும், அன்னப்பிளவில் 7 குழந்தைகளுக்கும், பிறவி வளை பாதம் 1 குழந்தைக்கும், கண்புரை 3 குழந்தைகள், காது கேளாமை பிரச்சனையால் 1குழந்தைக்கும், தண்டுவட பாதிப்பினால் 2 குழந்தைகளுக்கும் நோய் கண்டறிதல் மூலம் குறைபாடு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் நலமுடன் உள்ளனர். இத்திட்டத்தின் தொடர் கண்காணிப்பு மாதம் தோறும் நடைபெறும் சூழலில் நேற்று செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற தொடர் பரிசோதனை முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் சத்தீஷ்குமார் கலந்துகொண்டு குழந்தைகள் சத்தான உணவை உண்ண வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஊட்டமிகு உணவு அவசியம் என்பதை குறித்து வலியுறுத்தினார். நிகழ்வில் மாவட்ட பயிற்சி மருத்துவர் திவாகர், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலபதி, மருத்துவர்கள் சூரிய பிரகாஷ், சந்தியா, சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனர்கள் , பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post 35 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாறு சுகாதார மாவட்டத்தில் appeared first on Dinakaran.