செய்யாறு, மார்ச் 29: செய்யாறு பஸ் நிலையத்தில் பஸ் புரோக்கர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கொடநகர் சமாதியான் குளத்து தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(33). செய்யாறு பஸ் நிலையத்தில் தனியார் பஸ் புரோக்கராக வேலை செய்து வருகிறார். இவரது மாமனார் பாலமுருகன்(55) என்பவரும் பஸ் புரோக்கராக உள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பகல் 11 மணியளவில் வழக்கமாக செல்லவேண்டிய தனியார் பஸ், அங்கேயே நின்றிருந்தது. இதுதொடர்பாக மற்ற பஸ் புரோக்கர் மணி மற்றும் அவரது மகன்கள் அஜீத், சாரதி ஆகியோருக்கும், விக்னேஷ், பாலமுருகன் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த மணி தரப்பினர், விக்னேஷ், பாலமுருகனை சரமாரியாக தாக்கினார்களாம். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக விக்னேஷ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணி, அஜீத், சாரதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் விக்னேஷ், பாலமுருகன், உறவினர்கள் மணி, சிவகாமி, சங்கீதா ஆகியோர் மணி, சாரதி, அஜீத் ஆகிய 3 பேரையும் தாக்கியதாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து விக்னேஷ், பாலமுருகன், மணி, சிவகாமி, சங்கீதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்யாறு பஸ் நிலையத்தில் பஸ் புரோக்கர்கள் இடையே ஏற்பட்ட தகராறு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பஸ் புரோக்கர்கள் தகராறு 8 பேர் மீது வழக்கு செய்யாறு பஸ் நிலையத்தில் appeared first on Dinakaran.