கொடைக்கானல் ந‌க‌ரில் போக்குவரத்து சிக்னல், சிசிடிவி கேமரா செயல்பாட்டிற்கு வருமா..? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை துரித‌மாக‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என‌ பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா நகரமாக உள்ளது. கொடைக்கானலில் இன்னும் ஓரிரு வாரங்களில் கோடை சீசன் துவங்க உள்ளது. இந்நிலையில் குளுகுளு சீசன் கால நிலையை கொண்டாட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வாடிக்கை, இதனிடையே சுற்றுலா பயணிகளின் வசதி அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், குற்ற‌ச்செய‌ல்க‌ளை க‌ண்காணிக்க‌வும் நகரின் பல்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல்களும், கண்காணிப்பு கேமராக்களும் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டது.

அமைத்த நாள் முதல் தற்போது வரை போக்குவ‌ர‌த்து சிக்ன‌ல்க‌ள் அனைத்தும் செயல்படாம‌ல் காட்சி பொருளாக‌ உள்ளதால் வார‌ விடுமுறை ம‌ற்றும் தொட‌ர்விடுமுறை நாட்க‌ளில் குவியும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வாக‌ன‌ நெரிச‌லில் சிக்கி தவிக்கும் சூழலும் ஏற்பட்டு உள்ளது, போக்கு வ‌ர‌த்து நெரிச‌லை சீர் செய்ய‌வும், முறைப்ப‌டுத்த‌வும் போக்குவரத்து போலீசாரும் நாள்தோறும் கடும் சிரமத்துக்குள்ளாகி வ‌ருகின்றனர்.

எனவே, காவல்துறை நிர்வாகம் துரித‌மாக‌ நடவடிக்கை எடுத்து அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். ந‌க‌ரின் முக்கிய‌ப்ப‌குதிக‌ளில் செய‌ல்ப‌டாத‌ கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வ‌ர‌வும், குற்ற‌ச்செய‌ல்க‌ளை க‌ண்காணிக்க‌ கூடுத‌லாக‌ க‌ண்காணிப்பு கேம‌ராக்க‌ள் பொருத்த‌ வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானல் ந‌க‌ரில் போக்குவரத்து சிக்னல், சிசிடிவி கேமரா செயல்பாட்டிற்கு வருமா..? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: